ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்குவதாக கூறிய மோடி 15 ரூபாய் கூட வழங்கவில்லை : ஸ்டாலின்

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும் இச்சட்டத்தை எந்த மாநிலத்திலும் அமல்படுத்த கூடாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசை பொறுத்த வரையில் சட்ட ஆணையை படித்த பின்னரே முடிவு அறிவிக்கப்படுமென்று கூறியிருக்கிறது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடி மாணவர்கள் கடந்த ஞாயிறு மாலை மாட்டிறைச்சி விருந்து வைத்தனர். மேலும் பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டம் நடத்தப்படுமென்று திமுக சார்பில் கடந்த 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மகளிர் அமைப்பினர், தொண்டர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

பிரதமர் மோடி அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் குறிப்பிடும்படி மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த போது பிரதமர் மட்டும் இந்தியா கிடையாது எனவும் ஒவ்வொரு முதலமைச்சரும் சேர்ந்து தான் இந்தியா என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது.ஒரு மத்திய அமைச்சர் தமிழகம் வந்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மிரட்டி சென்றுள்ளார். இதை விட ஒரு வெட்ககேடு இருக்கிறதா? மத்திய அரசு முழுமையாக மாநில அரசின் உரிமைகளை பறிக்க பார்க்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த போது கூட உச்ச நீதிமன்றம் அது மாநில கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மறுப்பு தெரிவித்தது. அவ்வாறு இருக்கையில் மோடி எதை சாப்பிட சொல்கிறாரோ அதை தான் மக்கள் சாப்பிட வேண்டும் என்றால் உணவு உரிமை என்னாவது? பா.ஜ.க வாக்குறுதி கொடுத்த ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென்று அவர் அறிவித்தார். ஆனால் இதுவரை 15 ரூபாய் கூட வழங்கவில்லை. பாஜக கூறிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் ஏற்கனவே வறட்சி காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு மேலும் மேலும் இன்னல்களை கொடுத்து கொண்டிருக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்து 8 நாட்கள் ஆகியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.  என்று அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*