திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அனுமதியின்றி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி மீது 10 வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் திருமுருகன் காந்தி மீது இந்திய எண்ணெய் கழகத்தின் மீது கல் வீசியதாக  மற்றுமொரு வழக்கு இன்று போடப்பட்டுள்ளது. திருமுருகனை கைது செய்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும், பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய எண்ணெய் கழகம் மீது கல் வீசியதாக சுமத்தப்பட்ட வழக்கில் திருமுருகன் காந்தி உட்பட மூன்று பேரும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாக திருமுருகன் காந்தி கூறினார். அதன் பின்னர் திருமுருகன் காந்தி உட்பட மூன்று பேரின் காவலை வரும் ஜீன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*