பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!

இறைச்சிக்காக காளைகள், பசு, ஒட்டகம்  போன்றவற்றை சந்தைகளில் வாங்கவோ விற்கவோ தடை விதித்தது மத்திய அரசு. இதனால் நாடு முழுக்க மாட்டிறைச்சி உண்ணும் பெரும்பான்மை மக்களும் இறைச்சி வணிகர்களும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது ராஜஸ்தான் நீதிமன்றம்.

ஹின்ஹோனியா கௌசாலா ( பசுமாட்டு காப்பகம்) வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிமன்றம் மத்திய அரசுக்கு இப்படி பரிந்துரை செய்திருக்கிறது.

ஆசியாவின் சிறந்த பசு காப்பகம் எனச் சொல்லப்படும் ஹின்ஹோனியா கௌசாலாவில் கடந்த வருடம் ஜனவரி 1 முதல் ஜூலை 31 ற்குள் எட்டாயிரம் மாடுகள் காயங்களாலும், உடல்நலக்குறைவாலும் மடிந்தன.  இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் நீதிமன்றம் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசிடம் பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறது.மேலும் பசுமாட்டை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனவும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை தேசிய அளவில் சர்ச்சையை உண்டாக்கியிருக்கும் வேளையில் வரும் ராஜஸ்தான் அரசின் பரிந்துரை மக்களை பொருட்படுத்தாத இந்திய அரசின் குணத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*