அதிமுகவில் வெடிக்க காத்திருக்கும் கலகம்!

2011 சட்டசபை தேர்தலுக்கு பிறகு 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக கட்சி இரண்டாவது முறையாக மிகப் பெரும் வலுவான வெற்றியை பெற்றது. அதிமுகவின் அவ்வெற்றிக்கு ஜெயலலிதா என்ற கட்டுக்கோப்புள்ள ஒற்றை தலைமையும், அவர் அதிமுகவினை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்ததே காரணமாக அமைந்தது. இரண்டாவது முறையாக அவர் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு துரதிர்ஷ்டவசமாக உடல் நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதா இறப்பதற்கு முன்னரே பன்னீர் செல்வத்திடம் அனைத்து பொறுப்புகளும் வந்தன. ஏற்கனவே ஜெயலலிதா இரண்டு முறை சிறைக்கு போனபோது பன்னீரே இரண்டு முறையும் முதல்வராக பொறுப்பு வகித்ததால் தற்போது பன்னீர் கைக்கு பொறுப்பு வந்ததையும் தொண்டர்கள் மிக இயல்பாக பார்த்தனர். ஆனால் அதன் பிறகு சசிகலாவை பன்னீர், மதுசூதனன் போன்றோர் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டுமென்று வலியுறுத்தினர். அதன் பின் சசிகலா  முதலமைச்சராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். சசிகலா முதல்வராவதற்கு வசதியாக பன்னீர் செல்வம்  தனது பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும் தனது முதல்வர் பதவி ஆசையை ஓரமாய் ஒளித்து வைத்திருந்த பன்னீர் செல்வத்தால் அந்த நாற்காலியை விட்டுக்கொடுக்க முடியவில்லை, அதனையடுத்து பன்னீர் செல்வம் சசிகலா, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் என்று கூறி ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார். பன்னீரின் தியானத்துக்கு பிறகு அதிமுகவில் அரங்கேறும் காட்சிகளை கண்டு அதிமுகவின் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் தேவர் சமுதாயத்தினவரே செல்வாக்கு பெற்றவர்களாக ஒற்றுமையாக வலம் வருவார்கள். ஆனால் தற்போது அதிமுகவில் அந்த தேவர் சமுதாயமே இரு பிரிவாக பிரிந்து நிற்கிறது. பன்னீர் தலைமையில் தேனி மறவர்களும், சசிகலா தலைமயில் தஞ்சை கள்ளர்களும் பிரிந்து நிற்கிறார்கள். இதற்கிடையே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியோ கொங்கு பகுதியை சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தினவர் பலத்தை வளர்த்துவிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற எந்த சமுதாயமும் அரசை நெருங்க முடியவில்லையென்றும் கவுண்டர் சமுதாயத்தினவரே அனைத்தையும் நிர்ணயிக்கிறார்கள் என்ற அதிருப்தி எடப்பாடி அணிக்குள் எழ ஆரம்பித்திருக்கிறது. 17 துணை வேந்தர்கள் நியமன விஷயத்தில்கூட தன் சாதியினருக்கே பழனிசாமி அதிகளவில் இடம் அளித்திருக்கிறார். தேவர் சமுதாயத்தை சமாதானப்படுத்த இடங்கள் அளிக்கப்பட்டாலும் அதில் அவர்கள் முழு திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர வன்னியர் சமுதாய எம்.எல்.ஏக்கள், தலித் சமுதாய எம்.எல்.ஏக்கள் என அனைவருமே எடப்பாடி பழனிசாமி மேல் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் இவர்களையெல்லாம் மிரட்டியே இந்த ஆட்சி, மோடியின் ஆட்சியாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில்தான் பழனிசாமியின் நடவடிக்கைகளும் இருந்து வருகின்றன. உதாரணமாக நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் இன்னும் பழனிசாமி வாய் திறக்காமல் இருக்கிறார். அரசு மௌனம் காத்தாலும் தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பழனிசாமியோ காவல்துறை கொண்டு அதனை அடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். பழனிசாமியின் இந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக விரைவில்  கீழ் மட்ட அளவில் கலகங்கள் வெடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதைக்கு யாருக்கும் யார் மேல் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்த அரசு இன்னும் 4 வருடங்கள் நீடிக்குமா இல்லை நீடிக்காதா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தங்களை வளர்த்தெடுத்த தலைவியான ஜெயலலிதாவையும் அவர் வளர்த்தெடுத்த கட்சியையும் பதவி ஆசைக்காக மிதிக்கும் நிலைக்கு சென்றுவிட்டார்களோ என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த சந்தேகங்கள் அனைத்தும் தற்போதைய தலைமைகளுக்கு எதிராக கலகமாக வெடிக்கும் சூழல் உருவாகியிருப்பதாகவே கூறப்படுகிறது. அதனால் விரைவில் அதிமுக கழகத்தில் கலகம் ஒன்று நிச்சயம் இருக்குமென்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*