சர்ச்சையில் சிக்கியுள்ள ‘சுவாதி கொலை வழக்கு’ பற்றிய படம்

கடந்த வருடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகாலையில் நடைபெற்ற சுவாதி எனும் இளம்பெண்ணின் கொலை தமிழத்தையே பதற்றத்திற்குள்ளாகியது. மேலும் இந்த வழக்கில் பலரின் மீது சந்தேகங்கள் எழுந்தன. சுவாதியின் பெற்றோரின் மீதும் மாநில அரசின் மீதும் கூட சந்தேகங்கள் எழுந்தன. இறுதியாக ராம்குமார் எனும் இளைஞன் தான் குற்றவாளி எனக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான் அவன். சிறையிலடைக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோனான். பின்னர் இந்த வழக்கு இழுத்து மூடப்பட்டது.

இந்நிலையில் சுவாதி கொலையை மையமாக வைத்து இயக்குனர் ரமேஷ் செல்வன் படம் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் மக்களிடையே சுவாதி கொலையில் மறைக்கப்பட்ட விஷயங்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. இதனையடுத்து ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் ஸ்வாதியின் தந்தை புதன்கிழமை புகார் மனு கொடுத்தார்.

இந்நிலையில் இன்று ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

”ராம்குமாரை குற்றவாளியாக சித்தரித்து படம் இயக்கவில்லை. சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. யாரையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கவில்லை. சமூக அக்கறையோடுதான் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை இயக்கியுள்ளேன். ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த கற்பனையையும் புகுத்தவில்லை. எதையும் கூடுதலாகவும் சேர்க்கவில்லை.

சுவாதி பெயரைப் பயன்படுத்தி சம்பாதிப்பதற்காகவோ, சர்ச்சைக்காகவோ படம் எடுக்கவில்லை. இன்னொரு சுவாதிக்கு இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே படத்தை எடுத்துள்ளேன். படம் எடுத்து முடித்த பிறகு ராம்குமார் குடும்பத்துக்கும், சுவாதி குடும்பத்துக்கும், காவல்துறைக்கும் திரையிட்டுக் காட்டுவேன். அவர்கள் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு தான் படத்தை வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*