”என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது நண்பர் மல்லிக்கார்ஜீனாவும் கைது செய்யப்பட்டார். மேலும் பெங்களூர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா இடைத்தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் உட்பட கைதானவர்கள் அனைவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து தினகரன் மற்றும் மல்லிகார்ஜீனா சார்பில் டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சௌத்ரி லஞ்சம் பெற முயன்ற அதிகாரிகளை கண்டுபிடிக்க டெல்லி காவல்துறையினர் தவறிவிட்டதாக கூறி தினகரன் மற்றும் மல்லிகார்ஜீனாவுக்கு கடந்த 1-ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 5 லட்சம் ரூபாய் பிணைத் தொகை வழங்க வேண்டுமென்றும், இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்நிலையில், ஜாமீன் கிடைத்ததையடுத்து 35 நாட்கள் திஹார் சிறையில் இருந்த டிடிவி தினகரன் நேற்று விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்படும் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை சென்று மீண்டும் கட்சி பணியை தொடர்வேன். கட்சியில் இருந்து யாரும் நீக்கவில்லை. நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் உண்டு. சிறையில் இருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. யாரும் யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். எல்லோருடனும் நட்புடன் தான் இருப்பார்கள்” என்றார். தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவின் இரு அணிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் தினகரனின் ஜாமீன் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தான் சிறைக்கு சென்றபிறகு தன்னை அலட்சியப் படுத்திய அமைச்சர்களை தினகரன் எவ்வாறு கையாள்வார், பழனிசாமியுடனான அவரது நிலைப்பாடு இனி எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*