ஜி.எஸ்.டியும் சினிமாவும், ஷாப்பிங்மால்களும்: கமல்ஹாசனும்!

சினிமா மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்கா விட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என அறிவித்திருக்கிறார் நடிகர் கமலஹாசன். கமலின் இக்கருத்து திரையுலகில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
ஒரு வெள்ளிக்கிழமை வெளியாகி திங்கள்கிழமை திரையரங்கை விட்டு வெளியேறி விடுகிறது கோடம்பாக்கத்தில் உற்பத்தியாகும் தமிழ் சினிமா. முன்னர் எல்லாம் நூறு நாள் இருநூறு நாள் ஓடி கூட வசூலிக்காத வசூலை இப்போது மூன்றே நாள் வசூல் அள்ளி விடுகிறது.

 

காரணம் கட்டணக் கொள்ளை. ஹிட்டான படத்தின் டிக்கெட்டுகளை 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுத்து பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் ரஜினி, கமல் போன்றவர்களின் படங்களை வெளியான முதல் சில நாட்களில் 5000 ரூபாய் கூட கொடுத்துப் பார்க்கிறார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் மல்டிபிள் காம்பிளெஸ் எனப்படும் வணிக வளாகங்களில் திரையரங்கம் இருக்கும் நிலையில் ஏழைகளின் பெரிய கனவாக இருந்த சினிமாவை இந்த மால்கள் பிடுங்கி மத்திய தரவர்க்கத்திடம் கொடுத்தன. இன்று பெருநகர ஷாப்பிங் மால்களே ஒரு சினிமாவின் வசூலையும் வெற்றியையும் தீர்மானிக்கிறது. அந்த மால்களுக்கு வரும் மத்தியதரவர்க்கமே இன்றைய சினிமாவில் ஆன்மாவாக மாறியிருக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வில் இருந்து இரண்டை பிரிக்க முடியாது ஒன்று சினிமா, இன்னொன்று அரசியல் அதில் சினிமாவைப் பிரித்து தொலைக்காட்சியை அமர வைத்து விட்டார்கள். முன்னர் சினிமா நடிகர்களுக்கு பெரும் செல்வாக்கு மக்களிடம் இருந்தது. அதற்கு காரணம் சாதாரண மக்களால் தங்களின் ஸ்டார்களின் படங்களை மன எழுச்சியோடு கொண்டாட்டமாக பார்க்க முடிந்தது. சினிமாவை அந்த மக்களிடம் இருந்து பிடுங்கிய ஷாப்பிங் மால்கள் மால்கள் செய்த ஒரே நல்ல காரியம் ரசிகனைத் தாண்டி நடிகனை மக்களிடம் அண்ட அனுமதிக்க வில்லை! ரஜினியின் தோல்வி இங்கிருந்துதான் துவங்கியது!
நிற்க, கட்டணக்கொள்ளை கார்ப்பரேட் சினிமா வலைப்பின்னலும், ஷாப்பிங் மால்களும் இணைந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை ஒரு பகுதி மக்களை புறந்தள்ளி மேல் மத்தியதர்வர்க்கத்தை குறி வைத்து நடத்தும் சூதாட்டம் எனும் நிலையில் இந்த சூதாட்டத்திற்கு மேலும் போட்டியாய் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு சினிமாவுக்கு 28% சதவித வரியை விதிக்கிறது.
இதனால் திரையரங்கங்களில் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணங்களில் விலை உயரும். பிளாக்கில் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற டிக்கெட்டை இனி இரண்டாயிரத்திற்கு விற்பார்கள். 5000 ரூபாய்க்கு விற்ற டிக்கெட் இனி 10,000 ரூபாய்க்கு விற்கும் இதனால் ஏழைகளுக்கு என்ன இழப்பு.
ஒன்று மத்திய தரவர்க்கமும் சினிமா பார்க்க ஷாப்பிங் மால்களுக்கு வருவதை தவிர்ப்பார்கள். சினிமா தன் ஆயுளை வேறு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளும் என்னும் நிலையில்தான் நடிகர் கமலஹாசனின் கருத்து முக்கியம் பெருகிறது.
அவரது கருத்து இதுதான்.
“ மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது. பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம்.

எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன். இந்த அளவிலான ஜி.எஸ்.டி. வரியை இந்தி திரையுலகம் ஏற்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம்.” என்று கூறியுள்ளார்.
கோடிகளில் ஊதியம் வாங்கும் கமல் இது பற்றி பேசியிருக்க வேண்டியதில்லை. அது சினிமா மீதான் அவரது அக்கறையை வெளிப்படுத்துகிறது. ஆனால் சினிமாவை பாமர மக்களிடம் இருந்து பிடுங்கிய போது இதே கமல் அதை அமைதியாக சகித்துக் கொண்டு பணம் பார்த்தவர்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*