திருக்குவளை நாயகனுக்கு திருவிழா!

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி, எழுத்தாளர், பேச்சாளர், பாடலாசிரியர், வசனகர்தா, திரைக்கதையாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கருணாநிதிக்கு இன்று வைரவிழா எடுக்கப்படுகிறது.

திருவாரூர் அருகே திருக்குவளையில் முத்துவேலர்-அஞ்சுகம் இணைக்கு 1924-ஆம் ஆண்டு ஜீன் 3-ஆம் தேதி பிறந்தார் கருணாநிதி. சிறுவயது முதலே தமிழ் மீது தீராத பற்று கொண்டு படைப்பாற்றலை வளர்த்து கொண்டார். அரசியல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத  14-வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். பாட நூல்களை கண்டு அஞ்சுகிற வயதில் மாணவர் நேசன் என்ற மாணவர் பத்திரிகையை தோற்றுவித்தார். பெரியாரின் தொண்டனாகவும், அண்ணாவின் தம்பியாகவும் வலம் வந்த கருணாநிதி, பெரியாரோடு அண்ணாவுக்கு ஏற்பட்ட கருத்து மோதலால்  திமுக உதயமானதும் அதில் இணைந்தார். அங்கு ஆரம்பித்தது இவரின் அரசியல் அஸ்திவாரம். 1952-ஆம் தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. அதன்பின் நடந்த 1957-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்டது. குளித்தலை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ஆம் தேதி அறிவாளி கருணாநிதி முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து அவருக்கும் சட்டமன்றத்துக்குமிடையே பெரிய பந்தம் ஏற்பட ஆரம்பித்தது.

குளித்தலை தொகுதியில் வென்ற கருணாநிதி அதன்பின், 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்தவர் கருணாநிதி. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதல்வர் என இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் செய்யாத சாதனையை அவர் செய்து காட்டினார். அவர் முதல்வராக இருக்கும் போது சிறந்த மன்னனாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது சிறந்த வீரனாகவும் திகழ்ந்தவர். எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி அமர்ந்திருந்தால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மிரள்வார்கள். எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.

 

காரணம் கருணாநிதியின் பேச்சில் நக்கல் மட்டும் இருக்காது அதில் ஒரு புள்ளிவிவரம் இருக்கும். அவரது நாக்கு இதுவரை பேசாத விஷயங்கள் இல்லை. ஒருமுறை காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்த நாயகி சட்டமன்றத்தில் கருணாநிதியிடம், “பேரவை லாபிகளில் சி.ஐ.டிகள் வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்கிறார்கள். நேற்றுகூட லாபியில் சி.ஐ.டி.களைப் பார்த்தேன்.” என்றார். அதற்கு திமுக தலைவர் கருணாநிதி ,நீங்கள் பார்த்துக் புரிந்துகொண்டிருக்கிற அளவுக்கு இருந்தால் அவர்கள் திறமையான சி.ஐ.டி.களாக இருக்க மாட்டார்கள்” என்றபோது அவையே சிரிப்பொலியில் அதிர்ந்தது. மேலும், மாநில சுயாட்சி உரிமை தொடர்பாக இதே டி.என்.அனந்த நாயகி, மாநில சுயாட்சி தீர்மானத்தில் இன்டர் ஸ்டேட் கவுன்சில் அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளீர்கள். அது ஏற்கனவே அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்று கூறினார். அதற்கு கருணாநிதி, அரசியல் சட்டத்தில் இருக்கிறதே தவிர, இதுவரையில் அப்படிப்பட்ட கவுன்சில் அமைக்கப்படவே இல்லை. என்றார். மறுபடியும் அனந்த நாயகி, அதுதான் அடிக்கடி டெல்லிக்கு காவடி தூக்குகிறீர்களே, கேட்பதுதானே? என்ற கேள்வியை எழுப்ப , முதல்வர் கருணாநிதி உடனே, இப்போதுதான் வழிக்கு வந்தீர்கள். காவடி தூக்கும் நிலைமை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் இருக்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி கேட்கிறோம். என்றார் அதிரடியாக இதுதான் கருணாநிதியின் வாதத் திறமை எதிர்த் தரப்பினரை பேசவிட்டு அவர்களின் பேச்சிலிருந்தே பதிலெடுப்பார். திமுகவை சேர்ந்த கிட்டப்பா ஒருமுறை கருணாநிதியிடம், மயிலாடுதுறைக்கு விமான நிலையம் வேண்டுமென்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது அந்த விமான நிலையம் வரும்? என்றார். அதற்கு கருணாநிதி கிட்டப்பா.. அது இப்போது கிட்டாதப்பா என்றார் நகைச்சுவையாக. அவரால் ஒரே நேரத்தில் கியூப அரசியலும் பேச முடியும் சாமானிய அரசியலும் பேச முடியும். பேசுவதற்கு அவரிடம் எக்கச்சக்கமான விஷயங்கள் கொட்டி கிடக்கும்.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான், கைரிக்‌ஷா ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்‌ஷா கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே குடிசைகளை ஒழிக்க முதன்முறையாக குடிசை மாற்று வாரியத்தை அவர்தான் ஏற்படுத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். சுதந்திர தினத்தில் கோட்டையில் ஆளுநர் கொடியேற்றும் வழக்கத்தை மாற்றி அவ்வுரிமையை முதல்வருக்கு பெற்று தந்தவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தி, அதில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு என வழங்கியவர். பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் இயற்றியவர். மிக முக்கியமாக திருநங்கைகள் என மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் அளித்தவர்  வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களை இயற்றியவர் கருணாநிதி.. இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுகவும், கருணாநிதியும்தான்.  மேலும் அந்நெருக்கடி காலத்தை கடுமையாக எதிர்த்தவரும் கருணாநிதிதான். 1983-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார்.  மேலும் இலங்கை பிரச்னைக்காக கருணாநிதி தனது ஆட்சியை இரண்டு முறை இழந்துள்ளார். இப்படிப்பட்ட கருணாநிதி குடும்ப அரசியல் செய்வதாகவும், 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இறுதிகட்ட போரில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டப்படும் நிலைக்கு சென்றார் என்பதும் கசப்பான உண்மை. ஆனாலும் கருணாநிதியை விமர்சிக்க 100 விஷயங்கள் இருந்தால் அவரை பாராட்டுவதற்கு அவரிடம் 1000 விஷயங்கள் இருக்கின்றன. தன் மீது விழும் எந்த விமர்சன கணைகளை கண்டும் அவர் அஞ்சியதே இல்லை. அவரது இந்த குணம்தான் அவருக்கு அரசியலில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுத் தந்தது எனலாம். கருணாநிதியிடம் பத்திரகையாளர்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவர் பதில் சொல்வதற்கு எந்த கேள்விக்கும் அஞ்சியதோ, தயக்கப்பட்டதோ, புறந்தள்ளியதோ இல்லை.

கருணாநிதி நல்ல அரசியல்வாதி மட்டுமில்லை, சிறந்த எழுத்தாளர், கவிஞர், திரைக்கதையாசிரியர், மேடை பேச்சாளர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டவர். ஒருமுறை சென்னையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கம் ஒன்றில் கவிக்கோ அப்துல் ரகுமான்,

விதவை என்ற சொல்லில் கூட பொட்டு வைக்க முடியவில்லை

தமிழும் வஞ்சித்துவிட்டது என்று கவிதை பாடினார்.

அதற்கு கருணாநிதி,

கைம்பெண் என்று அழகு தமிழில் எழுதினால்

ஒன்றுக்கு இரண்டு பொட்டுகள் வைக்கலாம்

தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும் என்று பதில் கவிதை ஒன்றை கூறினார்.

அவர் எழுதிய ”நீ நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்” என ஒற்றுமையை பற்றி அவர் எழுதிய வாசகம் காலத்தால் அழிக்க முடியாதது. கண்ணதாசனை போல் கருணாநிதியை இதுவரை விமர்சித்தவர்கள் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் கருணாநிதி கண்ணதாசனை பற்றி குறிப்பிடும்போது, கன்ணதாசன் தூக்கினால் 60 அடிகளுக்கு தூக்குவார், கீழே போட்டால் 60 அடிகளிலிருந்து அப்படியே போட்டுவிடுவார். அப்படி அவர் தூக்கியவர்களிலும், கீழே போட்டவர்களிலும் நானும் ஒருவன் என்கிறார். அவரை நாகரீகமற்று விமர்சித்தவர்களை இதுவரை அவர் நாகரீகமற்ற முறையில் விமர்சித்ததேயில்லை. நேரு, அண்ணாவுக்கு பிறகு கடிதம் வாயிலாக கருத்துக்களை சொல்வதில் கருணாநிதி சிறந்து விளங்கினார். அவர் இதுவரை எழுதிய உடன்பிறப்புகள் கடிதம் 12 தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது. உலகமே போற்றும் வள்ளுவருக்கு குமரி கடலில் வானளவு உயர்ந்த சிலையும், தலைநகரத்தில் வள்ளுவர் கோட்டமும் நிறுவியவர் கருணாநிதி காரணம் அவருக்குள் இருந்த கவிஞன். அவர் முழு நேர அரசியல்வாதியாக இல்லாமல் முழு நேர கவிஞராக இருந்திருந்தால் இங்கு பல கவிஞர்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும்.

அவர் எழுதிய தூக்குமேடை நாடகம் பரவலாக பேசப்பட்டது. அந்த நாடகத்தின்போதுதான் எம்.ஆர்.ராதா கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை முதன்முதலாக அளித்தார். ஒரு நாடக மேடையில் எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் நடித்து கொண்டிருந்த போது திடீரென எம்.ஆர்.ராதா கருணாநிதியிடம், அண்ணாவை தளபதி என்று அழைக்கிறீர்களே அவர் இதுவரை எந்த போர்க்களத்துக்கு சென்று வந்திருக்கிறார் என்ற கேள்வியை வசனத்தின் வாயிலாக தொடுத்தார், அதற்கு சற்றும் பதற்றமடையாத கருணாநிதி, உறைக்குள் இருந்தாலும் வாள் வாள்தான், போர்க்களத்துக்கு செல்லாவிட்டாலும் அண்ணா தளபதிதான் என்று உடனே பதிலளித்தார். இதுதான் கருணாநிதி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கருணாநிதியின் பேச்சு முறை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருணாநிதி மேடையில் ஏறி தனது கரகரத்த குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அந்த ஒற்றை வாக்கியத்தை கூறினால் கூட்டத்திலிருந்து எழும்பும் கரகோஷ ஒலி அடங்க ஓரிரு நிமிடங்கள் ஆகும். தற்போது தனது உடல்நிலை காரணமாக தீவிர அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியிருக்கிறார். அவர் ஒதுங்கியிருந்தாலும் அரசியல் அவரை ஒதுக்கவில்லை.  தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து சொல்ல வருவது அநேகமாக இந்தியாவிலேயே கருணாநிதிக்கு மட்டுமே இருக்கக்கூடும். அவர் ஏறாத மேடையில்லை, பேசாத பேச்சில்லை. ஆனால் தற்போது அவருக்காக எடுக்கப்படும் வைரவிழா மேடையில் அவர் ஏறி என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று பேசமுடியாத நிலையில் இருக்கிறார். பேசி பேசியே எதிர்த்தரப்பை மடக்கி, ஆட்சியை பிடித்த ஒரு தலைவருக்கு இன்று பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவர் இனி மேடையில் ஏறி பேச முடியாத நிலையில் இருந்தாலும் தமிழகத்தின் அரசியல் மேடைகளில் கருணாநிதி என்ற பெயர் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்து பேச்சப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது உறுதி.

-விக்ரம்

1 Comment

  1. அருமையான கட்டுரை.. ஆழமான கட்டுரை… கருணாநிதியை பற்றி ஆழமான அலசல்…. நன்று…

Leave a Reply

Your email address will not be published.


*