ஜிஎஸ்டி மாநாட்டில் நிதியமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

42 விதமான பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியானது நீண்ட பிரச்னைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. இதனையடுத்து அதிலுள்ள சில பிரச்னைகளை களைவதற்காகவும், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காகவும் ஜிஎஸ்டி தொடர்பான மாநாடுகள் நடத்தப்படுகின்றன. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், கடந்த மாதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் 15-வது ஜிஎஸ்டி கூட்டம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் நடைபெற்றது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மைதா , கோதுமை, கடலை மாவு ஆகியவற்றுக்கு வரி விதிக்கக் கூடாது. வணிகச் சின்னம் இடப்பட்ட மற்றும் இடப்படாத உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. கைத்தறி துணிகளுக்கு வரி விலக்கு அளித்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் கேன்களுக்கும், பாக்கெட் நீருக்கும், கைத்தறி துணிகளுக்கும் வரி விதிக்கக் கூடாது என்றும் மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும், ஊறுகாயை பொறுத்தவரை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம். உரங்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும். அரிசி பிரதான உணவு என்பதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது. தமிழகத்தில் விரைவில் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும். பனை வெல்லத்திற்கு 18% வரி விதிப்பு மிகவும் அதிகம். மூக்குக் கண்ணாடிக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்துக்கு பதில் 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஏசி வசதி இல்லாத ஹோட்டலில் உணவுக்கு 12 சதவீதத்துக்கு பதிலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்.வெட் கிரைண்டருக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு செஸ் வரியை விதிக்கக் கூடாது. கைவினை பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது. கையால் செய்யப்பட்ட தீப்பெட்டிகளுக்கு வரி கூடாது. கையால் செய்யப்பட்ட நகைகளுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*