ஜெயக்குமார் ஒரு உலக மேதை : டிடிவி தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன்  கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்றதும் அவருக்கு இனி ஜாமீன் கிடைக்காது என்ற நினைப்பில் அதிமுக அம்மா அணியினர் தினகரனை ஓரங்கட்டும் செயலில் ஈடுபட்டு வந்தனர். முக்கியமாக நிதியமைச்சர் ஜெயக்குமார்  கட்சியின் நலன் கருதி தினகரனையும் சசிகலாவையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் தினகரன் நேற்று சென்னை திரும்பினார். இதற்கிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் மாட்டிறைச்சிகான தடை குறித்தும் மத்திய அரசின் 3 ஆண்டு ஆட்சி குறித்தும் விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசுக்கு தமிழக அரசு பயந்து போகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் நமது எம்.ஜி.ஆரில் வெளியான மத்திய அரசுக்கு எதிரான கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து விளக்கமளித்தது. இதுகுறித்து ஜெயக்குமார் கூறும்போது நமது எம்ஜிஆரில் வந்துள்ள கருத்து  அதிமுகவின் கருத்தல்ல. நமது எம்.ஜி.ஆர் நாளேடுக்கும் அதிமுகவுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை என்று கூறினார். பதவி ஆசைக்காக இவ்வளவு காலமாக இருந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லையென பழனிசாமி தரப்பு கூறியது பெரும் விவாதத்திற்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில்,, ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர். அவர் கூறும் கருத்துகளுக்கெல்லாம் என்னால் பதில் கூறமுடியாது. அவர் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. அவருடைய கருத்துக்கு அவருடைய உயரத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கு காலம் பதில் சொல்லும் என்றார். தற்போது தினகரன் ஜெயக்குமாரை வெளிப்படையாக விமர்சித்திருப்பதால் ஜெயக்குமார் மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மேலும் தினகரன் கடும் கோபத்தில் இருக்கிறாரென்று உறுதியாகியிருக்கிறது. இதனால் அதிமுக அம்மா அணியில் இன்னும் என்னென்ன திடீர் திருப்பங்கள் நிகழவிருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*