என்னை நீக்கும் அதிகாரத்தை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது? : டிடிவி தினகரன்

கட்சியிலிருந்து என்னை நீக்கும் உரிமையை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்,

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளி வந்ததும் கட்சி பணியில் தொடர்ந்து நீடிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவர் கட்சியில் தொடர்வதை அமைச்சர்கள் விரும்பவில்லை. அதனால் இன்று தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கட்சி நலன் ஆட்சி நலனுக்காக தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் அதிமுகவில் தினகரன் தலைமையிலான மூன்றாவது அணி உருவாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இதற்கிடையே டிடிவி தினகரன் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றார். அவருடன், அவரது மனைவி அனுராதா, வெற்றிவேல், இன்பதுரை, பார்த்திபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். எம்.பி நாகராஜீம் உடன் சென்றார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. அமைச்சர்கள் தங்கள் சுயபயத்தால் நாங்கள் விலகவேண்டும் என கூறுகிறார்கள். கட்சியில் இருந்து என்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 45 நாட்கள் நான் ஒதுங்கியிருந்தும் இரு அணிகள் இணைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிவருவதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சி இணைப்பு குறித்து 60 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சசிகலா அறிவுரை கூறி உள்ளார். கட்சிக்கு பின்னடைவு  ஏற்பட்டால் 60 நாட்கள் கழித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். அமைச்சர்களுக்கு யார்மீது பயம் உள்ளது என்பதை காலம் தெளிவுபடுத்தும். கட்சியை விட்டு என்னை நீக்கும் அதிகாரத்தை ஜெயகுமாருக்கு யார் கொடுத்தது?. என்று அவர் பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*