கவிழ்கிறது அதிமுக ஆட்சி?

நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவின் 17 அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளிவந்தார், அவர் ஜாமீனில் வெளிவந்ததும் மீண்டும் கட்சி பணியில் தொடரவிருப்பதாக அதிரடியாக தெரிவித்தார். ஆனால் அவர் கட்சியில் நீடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என்றும் தினகரனை சந்திக்க செல்லமாட்டோம் என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதே போன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் குறித்து தினகரன் கூறுகையில், ஜெயக்குமார் ஒரு உலக மேதை என்று கூறினார். இதன் மூலம் ஜெயக்குமாருக்கும் தினகரனுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரிந்தது. மேலும் தினகரனுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். பழனிசாமி மேல் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் 17 அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்ட 17 அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் ஜெயக்குமார் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்தும் அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தினகரன் ஜாமீனில் வெளிவந்து சசிகலாவை சந்தித்த நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கட்சி நலன், ஆட்சி நலன் கருதி டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர வேண்டும். ஏற்கனவே டிடிவி தினகரன் அறிவித்தபடியே கட்சியிலிருந்து அவர் ஒதுங்கியிருக்க வேண்டும். தினகரனை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்றார். ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு பதிலளித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறுகையில், தினகரனை கட்சியினர் சந்திக்க கூடாதென்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்று கூறினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். ஆனால் டிடிவி தினகரனுக்கு இன்பதுரை, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.  நாகராஜ் எம்.பியும் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். மேலும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வரும் ஜீம் 14-ஆம் தேதி சட்டசபை கூடவிருக்கிறது. இதில் ஒருவேளை வெட்டு தீர்மானம் கொண்டுவந்தால் தினகரனுக்கு ஆதரவாக உள்ள 11 எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்து  எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்ப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் ஜுன் 14-ஆம் தேதி கூடவிருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்த இந்த அரசு 4 ஆண்டுகளுக்கு தொடருமா இல்லை கவிழுமா என்ற கேள்வி தமிழகத்தில் அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*