கிரண்பேடிக்கு எதிராக அதிரடி:நாராயணசாமி கட்டளைகள்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை அதிகாரிகள் யாரும் அமைச்சர்களின் உத்தரவின்றி சந்திக்க கூடாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதும் அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கிரண்பேடி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளில் தலையிட்டு வருகிறார் என்றும் அதோடு அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் தொகுதிக்கு சென்று நேரடியாக அவர் ஆய்வு செய்ததும் மோதல் வலுப்பெற்றது. அதேபோல் மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதில் தவறுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி கலந்தாய்வு கூட்டம் நடந்த சென்டாக் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அதோடு மாணவர் சேர்க்கையில் சில மாற்றங்களையும் செய்தார். கிரண்பேடியின் இச்செயலால் புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கமான மோதல் உச்சம் தொட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியும், புதுச்சேரி தலைமைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார். மேலும் கடந்த ஒரு வருடமாக நான் நெருக்கடியான சூழ்நிலையிலேயே பணியாற்றி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், கிரண்பேடி வாட்சப்பில் முதல்வர் நாராயணசாமிக்கு என் கேள்விகள் என்று, புதுச்சேரியில் நான் நிர்வாகியாக செயல்பட வேண்டுமா இல்லை ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்படவேண்டுமா? புதுச்சேரியில் மக்கள் நீதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள் மக்கள் பணி செய்யும்போது சுயநலமின்றி செயல்பட வேண்டும் போன்ற 32 கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டிருந்தார். இந்த சம்பவம் இன்று புதுச்சேரி சட்டசபையில் எதிரொலித்தது. திமுக உறுப்பினரான சிவா எழுந்து, தொடர்ச்சியாக ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை என்ன என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த நாராயணசாமி ஆவேசமாக, புதுச்சேரியில் கிரண்பேடிக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவருக்கு ஆட்சியாளர்கள் மேல் கருத்து வேறுபாடு இருந்தால் அதனை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பித்து போகும் அளவு கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அவர் செயல்பட்டு வருகிறார். சுய விளம்பரத்திற்காக கிரண்பேடி செயல்படுகிறார். கடந்த ஒரு வருடமாக அவரது செயல்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தேன். தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளேன். அதிகாரிகள் யாரும் அமைச்சர்களின் உத்தரவின்றி கிரண்பேடியை சந்திக்க கூடாது. எவ்வித தகவலுமின்றி கிரண்பேடி தொகுதிக்கு வந்தால் மக்களுடன் இணைந்து அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் கிரண்பேடிக்கு எதிராக மறியலில் ஈடுபடுங்கள் என்று அதிரடியாக பேசினார். நாராயணசாமியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநிலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அவ்வாறு திரும்ப பெறவில்லையெனில் வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார். இதற்கிடையே கிரண்பேடிக்கு எதிராக பேசியதால் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் 10 நிமிடங்கள் அமளி ஏற்பட்டது. மேலும் கிரண்பேடிக்கு எதிராக பேசியதை கண்டிக்கும் விதமாக என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கிரண்பேடி தொகுதிகளுக்கு முன்னறிவிப்பின்றி செல்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களை தரம் தாழ்ந்து பேசுகிறார். சமூக வலைதளங்களில் ரகசியங்களை வெளியிடுகிறார். கிரண்பேடி ஒரு விளம்பர பிரியராக இருக்கிறார். அவர் புதுச்சேரி அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துகிறார். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க சட்டப்பேரவைக்குத்தான் உரிமை உள்ளது. கிரண்பேடி தனது எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*