கொலை குற்றச்சாட்டில் பாராலிம்பிக் மாரியப்பன்!

மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக்கில் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தமிழகத்தையே உலகளவில் திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது தான் வென்ற பதக்கத்தை திருப்பியளிப்பதாக அறிவித்தார். இவர் தற்போது ஒரு இளைஞரின் மரணத்தில் சந்தேகிக்கப்பட்டுள்ளார்.

மாரியப்பனின் ஊர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் சதீஷ்குமார் கடந்த சனிக்கிழமையன்று பெரிய வடகம்பட்டி மாரியம்மன் கோவிலருகே நின்றிருந்த மாரியப்பனின் புதிய காரின் மீது தெரியாமல் மோதியுள்ளார். இதில் அவரது காரின் பின்புற கதவு சேதமடைந்தது. இதனால் கோபமடைந்த மாரியப்பன் அவரது நண்பன் யுவராஜ் மற்றும் சிலருடன், சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் டேனிஷ் பேட்டை ரயில் தண்டவாளத்தின் அருகே சதிஷ்குமாரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் உண்டாகியிருக்கின்றன. தகவலறிந்த போலீசார் சதிஷ்குமாரின் உடலை அவரது உறவினர்களிடமிருந்து மீட்டு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞரின் பெற்றோர், மாரியப்பன், மாரியப்பனின் தாய் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் இது கொலையா (அ) தற்கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்படியே அது தற்கொலையாக இருந்தாலும் மாரியப்பனின் மிரட்டலுக்கு பயந்துதான் சதீஷ்குமார் தற்கொலை செய்திருப்பார் என அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே எங்களால் எந்த விசாரணையையும் மேற்கொள்ள முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*