சசிகலாவை சந்தித்தார் தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுச் செயலாளர் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்து பேசி வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும்,  இரட்டை இலைக்கு லஞ்ச கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரனும் சிறை சென்றதை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு காட்சிகள் அரங்கேறின. இரு அணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முதற்படியாக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்களை அகற்றினர். இதனைத் தொடர்ந்து டெல்லியின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகளவில் கிடைக்க உற்சாகமானார் பழனிசாமி. இதனால் தினகரனையும், சசிகலாவையும் முழுவதுமாக ஓரங்கட்டும் வேலையில் அவரும் அவரது ஆதரவு அமைச்சர்களும் ஈடுபட தொடங்கினர். அதன் ஒருகட்டமாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளை பறிக்க பழனிசாமியே உத்தரவிட்டார். தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது என்ற நம்பிக்கையில் இந்த செயல்களையல்லாம் செய்து வந்த பழனிசாமிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளிவந்த தினகரன் கட்சியிலிருந்து என்னை நீக்க பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளதென்று அதிரடியாக அறிவித்தார். உடனே பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர். இதனால் மீண்டும் அதிமுக அரசியல் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றார்.  அவருடன் அவரது மனைவி, 10 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.நாகராஜ் உடன் சென்றனர். பெங்களூர் பரப்பன அக்ரஹரா சிறையில் இருக்கும் சசிகலாவை அவர் சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தான் சிறையில் இருந்த காலத்தில் பழனிசாமியின் நடவடிக்கை, அமைச்சர்கள் தன்னை ஒதுக்கி வைத்ததாக அறிவித்தது, இரு அணிகளின் இணைப்பு, மீண்டும் கட்சி பணியில் ஈடுபடலாமா? வேண்டாமா? போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது. சசிகலாவை சந்தித்து ஆலோசனைகளை பெற்று கட்சி பணிகளில் ஈடுபடுவேன் என்று தினகரன் கூறியிருந்தார். அதன்படி  சசிகலாவை சந்தித்திருக்கும் தினகரன் இதற்கு பின் அவர் எவ்வித நடவடிக்கையில் ஈடுபடுவார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.  அவரது அடுத்தகட்ட  நடவடிக்கை மூலம் அதிமுகவில் புதிய அணி உருவாகுமா இல்லை தன்னை எதிர்த்த அமைச்சர்களை நீக்கி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பழனிசாமியிடம் முன்வைத்து அவருடன்  தினகரன் ஒத்துப்போவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. முன்னதாக பெங்களூர் செல்லும்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் உள்ள அணிகள் இணைவதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசித்து, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நான் செய்ய உள்ளேன். அதற்காகவே இப்போது பெங்களூரு செல்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஆட்சியில் நான் தலையிட விரும்பவில்லை. அவரை தொந்தரவு செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய பணி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான். இன்று சசிகலாவை சந்திக்க செல்கிறேன். அவரது ஆலோசனையை பெற்று கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். என்னைப்பற்றி சில அமைச்சர்கள் கூறியுள்ளது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொண்டர்கள் எனக்கு உற்சாகம் தருகிறார்கள். சென்னையில் இருந்து எனக்கு வழி நெடுக  தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்’ என்று கூறினார். சசிகலாவை தினகரன் சந்தித்திருக்கும் நிலையில் அவரின் அடுத்தக்கட்ட அரசியல் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*