முழு வீச்சில் மீத்தேன் பணி: பெ.மணியரசன் கைது!

தமிழக நலனை சீர்குலைக்கும் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து அழிவை ஏற்படுத்தும் திட்டங்களை ஒதுக்கி வருகிறது. அத்திட்டங்களுக்கு எதிராக உழவர் போராட்டக்களத்தில் தமிழக உழவர்களுக்கு ஆதரவாகவும் விவசாய சங்கங்கள் நடத்தும்  அறவழிப் போராடங்களுக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருவதுடன் போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றனர். கடந்த சனிக்கிழமை நெடுவாசலில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு.. மத்திய அரசுக்கு அடியாள் வேலை செய்வது போல மாநில அரசு விவசாயிகளுக்காக போராடுபவர்களை கைது செய்து வருகிறது என்று பேசினார்.

இந்நிலையில், கும்பகோணம் கதிராமங்கலத்தில் மத்திய அரசு மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மற்றும் காவிரி மேலாண்மை மீட்பு குழுவினர் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தை காவல்துறையினர் வழிமறித்து கும்பகோணம் அருகில் வைத்து கைது செய்தனர். இதேபோல் சமீபத்தில் மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. மாநில நலனுக்காக போராடுபவர்கள் மீது தமிழக அரசு தொடர்ந்து கைது நடவடிக்கையை பிரயோகப்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசு மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கைதான பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில அரசு மத்திய அரசின் ஏவலாள் போல் செயல்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொருவராக கைது செய்து வருகிறது.

ஏற்கனவே நெடுவாசல் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த நிலையில் பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று நெடுவாசல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அந்த ஒத்தி வைப்பை பயன்படுத்திக் கொண்ட மத்திய மாநில அரசுகள் எதிர்ப்பையும் மீறி  அடக்குமுறைகளை ஏவி மீத்தேன்  பணிகளை திவீரமாக்கியிருக்கிறார்கள்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*