16 வயது பொன்.ராதாகிருஷ்ணன் : ஸ்டாலின்

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறதா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு கடந்த ஜீன் 3-ஆம் தேதி வைரவிழா எடுக்கப்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 10 தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழா குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த விழா அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்கள் நடத்திய விழா, மேலும் இது வைரவிழா இல்லை வயதானோருக்கான விழா என்று விமர்சித்திருந்தார். அவரது இந்த பேச்சு சலசலப்பை உருவாக்கியுள்ளது. அவரது இந்த பேச்சை வைத்து அவரை சமூக வலைதளவாசிகள் பொன்.ராதாகிருஷ்ணன் என்ன கல்லூரி மாணவரா என்று கிண்டல் செய்து கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், காயிதே மில்லத்தின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத். அவருடைய கனவை நனவாக்க வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வது போல தமிழை ஆட்சி மொழியாக்க முயலவேண்டும். காவிகள் ஆளலாம் என்று கூறியதன் மூலம் தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் நாகரிகம் தெரிகிறது. வைர விழாவை வயதானவர்கள் விழா என்று கேலிசெய்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதா ஆகிறது. அவர் மூத்த குடிமக்களை அவமானப்படுத்தியுள்ளார். மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, மக்களின் கலாச்சார, பொருளாதாரத்தைச் சீரழிக்கிறது. அதற்கு எதிராகவே, எதிர்க்கட்சிகள் அனைவரும் வைர விழாவின்போது குரல்கொடுத்தோம். அது, அரசியலுக்கான கூட்டணி அல்ல’ என்று தெரிவித்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*