அமைச்சர்கள் அறையில் பழனிசாமியின் புகைப்படம்!

தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளது.

தினகரனை கட்சியிலிருந்து நீக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர்கள் நேற்று அறிவித்ததிலிருந்து தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை அடைந்துள்ளது. ஏற்கனவே தினகரனுக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு 17-ஆக உயர்ந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி எப்போது என்ன நடக்குமென்ற பதற்றத்தில் இருந்து வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுகவின் இந்த பிளவு பலமாக எதிரொலிக்கும்.  எடப்பாடி பழனிசாமி அணியின் எம்.எல்.ஏக்கள் தற்போது அணி மாறிவருகின்றனர். பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது  எம்.எல்.ஏக்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி மேல் அதிருப்தியில் இருந்தபோது அவருக்கு பக்கபலமாக இருந்தது அமைச்சர்கள்தான் என கூறப்படுகிறது. அதனால்தான் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய விவகாரத்தில்கூட பழனிசாமி அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். மேலும் அமைச்சர் சரோஜா மீது லஞ்சம் புகார் வைக்கப்பட்டபோது அவர் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் நழுவிக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தினகரன் விவகாரத்தில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு பழனிசாமி தொடர்ந்து கட்டுப்பட்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுகூட அமைச்சர்கள் அவர் இருக்கும்போதே தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவது என்ற முடிவை எடுத்தபின் அவரிடம் கூறினர். அதற்கு பழனிசாமியும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்தே அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து தினகரனை நீக்குவதாக அறிவித்தனர். பழனிசாமி அணியில் அமைச்சர்கள்தான் எல்லாமுமாய் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர்களும் முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட்டு வருவதால் அனைத்து அமைச்சர்களும் தங்களது அறையில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி படமும் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தனக்குதான் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதையும், அமைச்சரவையின் கட்டுப்பாடு தன்னிடம்தான் இருக்கிறதென்பதை காட்டவும்தான் பழனிசாமி இவ்வாறு செயல்பட ஆரம்பித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சராகி 100 நாட்கள் கடந்த நிலையில் தற்போது தான் எடப்பாடி பழனிசாமியின் படம் மாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*