மோடியால் ஒட்ட வைக்க முடியுமா அதிமுகவை?

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கிலிருந்து தினகரன் ஜாமீனில் வெளி வந்ததும் தமிழக அரசியல் பரபரப்பாகவும், அதிரடி திருப்பங்கள் நிறைந்ததாகவும் மாறியிருக்கிறது. தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜெயக்குமார் நேற்று அறிவிக்க என்னை நீக்க ஜெயக்குமாருக்கு உரிமையில்லை என்று தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தினகரனை அதிமுகவினர் பார்க்க கூடாதென்று கூற ஜெயக்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் அதிமுகவில் தினகரன் தலைமையிலான மூன்றாவது அணி ஒன்று உருவாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக தற்போது 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் வரும் ஜீன் மாதம் 14-ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வெட்டு தீர்மானம் கொண்டு வந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தால் பழனிசாமியின் ஆட்சி கவிழ்வது உறுதியாகிவிடும். அதனால் தற்போதைக்கு பழனிசாமியின் அரசு காப்பாற்றப்பட வேண்டுமென்றால் பன்னீர் அணியின் ஆதரவு தேவையாயிருக்கிறது. பன்னீர் செல்வம் அணியின் ஆதரவை பழனிசாமி அணிக்கு வாங்கி கொடுப்பது மோடி அரசின் கடமையாக கருதப்படுகிறது. ஆனால் அதிமுகவில் இருந்த பன்னீர் செல்வத்தை மோடி முதல்வராக்குவதாக உறுதியளித்தே தனது விசுவாசியாக மாற்றினார். தற்போது பன்னீர் அணி பழனிசாமியின் அணிக்கு ஆதரவு அளித்து அதன்பேரில் பழனிசாமி அரசு நகர்ந்தாலும் பழனிசாமியின் தலைமையில் பன்னீர் செல்வம் அமைச்சராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் முதல்வர் பதவி பன்னீருக்கா? பழனிசாமிக்கா? என்பதில் இருவருக்கும் இருக்கும் போட்டி இன்னும் குறைந்தபாடில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலபேருக்கு அமைச்சர் பதவி கேட்டு பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் பழனிசாமி அணி இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் பழனிசாமி அணிக்கும் டெல்லியின் ஆதரவு முழுமையாக இருப்பதால் அங்குள்ளவர்கள் மிகவும் தைரியமாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இத்தனை காலம் அதிர்ந்து பேசாத ஜெயக்குமார்தான் தற்போதைக்கு அங்கு எல்லாமுமாய் இருக்கிறார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை முதல்வருக்கு அடுத்த நிலையான நிதியமைச்சர் என்ற பொறுப்புக்கு உயர்த்தியதுதான் அவர் இவ்வாறு பேசுவதற்கு காரணமென்று கருதப்படுகிறது. ஆனால் பழனிசாமியோ, ஒருவேளை பன்னீர் அணியோடு இணையும் சூழ்நிலை வந்தால் எதிரணியை விமர்சித்த பழிக்கு நாம் பலியாகாமல் ஜெயக்குமாரை பலியிட திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும் ஜெயக்குமாருக்கு வாக்கு வங்கி பெரிதாக இல்லை அதனால் அவர் கட்சியிலிருந்து விலகினாலும் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை எனவும் பழனிசாமி கருதுவதாகவும் கூறுகிறார்கள், இது தெரியாமல் ஜெயக்குமார் தொடர்ந்து அனைவரையும் விமர்சித்தோ, இல்லை முக்கியமான முடிவுகளையோ அறிவித்து கொண்டிருக்கிறார். மேலும் பாஜக பன்னீர் அணியினை பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்க வைத்தாலும் அந்த அணியில் உள்ள கே.பி.முனுசாமி போன்றவர்களால் பன்னீர் அணியில் பிளவு ஏற்படும் என கூறப்படுகிறது. ஏனெனில் பழனிசாமி அணியோடு பன்னீர் அணி இணைந்தால் இங்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அங்கு இருக்காது என கே.பி.முனுசாமி போன்ற மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். பாஜக அரசு உடைந்திருக்கும் அதிமுகவை ஒட்டவைத்து இந்த அரசை தனது கட்டுப்பாட்டில் இயக்க நினைத்தாலும் நிச்சயம் இந்த அரசு நிலையாக இணைந்து இருக்காது என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.

முக்கியமாக பாஜக அரசின் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு பிறகும் டிடிவி தினகரன் தைரியமாக எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்ய ஆரம்பித்திருக்கும் அரசியலில் ஜெயலலிதா செய்த தைரியமான அரசியலின் சாயல் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. இதனால் மொத்த அதிமுக தொண்டர்களின் கவனமும் தற்போதைக்கு தினகரன் மேல் குவிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் பாஜக அரசு இரண்டு அணிகளையும் ஒட்ட வைத்து அதிமுக அரசை நகர்த்துவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்று கூறப்படுகிறது. தினகரனின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்கு சசிகலாவை சொத்து குவிப்பு வழக்கு போன்ற பெரிய வழக்கில் சிறைக்கு அனுப்பியது போல தினகரனை சிறைக்கு அனுப்பினால்தான் முடியுமே ஒழிய லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிறிய வழக்கில் அவரை சிறைக்கு அனுப்பி அவரது அரசியல் வளர்ச்சியை நிச்சயம் பாஜகவால் தடுக்க முடியாது. ஏனெனில் பன்னீர் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, மத்தியில் ஆளும் பாஜக என மூன்று தரப்பை தற்போது தினகரன் ஒற்றை ஆளாக எதிர்த்து கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது என்பதை இந்த மூன்று தரப்பும் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*