2 பெண் சிசுக்கள் கொலை:குற்றவாளி திவ்யா மட்டும்தானா?

படித்தவர்கள் அதிகம் நிரம்பிய குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரு பெண் சிசுக்களை கொலை செய்த குற்றத்தில் தாயொருவர் கைதாகியிருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் நிலையில் மொத்த குற்றத்திற்கும் தாயை மட்டுமே தண்டிப்பது சரியாகுமா? இக்கொலைக்கு அவர் மட்டும்தான் காரணமா?
சம்பவம்
நாகர்கோவில் அருகே உள்ள காற்றாடித்தட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன், திவ்யா தம்பதிகள் 2015-ஆம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பம் அடைந்த திவ்யா கடந்த 22 ஆம் தேதி நாகர்கோவில் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளோடு கோட்டாரில் உள்ள தன் வீட்டில் இருந்தார் திவ்யா.
இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி பிறந்த குழந்தைகள் இரண்டும் இறந்து விட்டதாக திவ்யா கணவர் கண்ணனுக்கு தகவல் சொல்ல அவர் திவ்யாவில் தாய் வீட்டிற்கு வந்து குழந்தைகளின் பிணத்தை அவரது சொந்த ஊரான காற்றாடித்தட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைகளின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால், குழந்தை நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு சிலர் புகார் கொடுக்க அவர் கொடுத்ஹ புகாரின் அடிப்படையில் தாய் திவ்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பால் கொடுத்த போது பால் புரை ஏறி இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக கூற சந்தேகம் அடைந்த அதிகாரிகள் போலீசில் புகார் கூறினார்கள்.
புகாரின் பேரில் குழந்தைகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. இரு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்து திவ்யா கொலை செய்து விட்டதாக திவ்யாவை கைது செய்திருக்கிறது காவல்துறை.
திவ்யாதான் காராணமா?


திவ்யாவுக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவதாக பிறந்த இரு குழந்தைகளும் பெண் குழந்தை என்பதால் அவரை சென்று கணவர் கண்ணனோ அவரது உறவினர்களோ பார்க்கவும் இல்லை எதுவும் பேசவும் இல்லை. ஏற்கனவே பெண் குழந்தைகள் தொடர்பான மன அழுத்தம் திவ்யாவுக்கு இருந்துள்ள நிலையில் உச்சக்கட்ட மன அழுத்தம் அடைந்த திவ்யா தான் பெற்றெடுத்த குழந்தைகளை அவரே உயிர்பறிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பெண்குழந்தைகளை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் சமூகத்தில் வேறு ஏதேனும் காரணங்களுக்காக இக்கொலை திட்டமிட்டு நடந்திருந்தால் திவ்யா மட்டுமே கொலைக்கு காரணம் என்று கூறியிருக்கலாம். அனால் ஜனநாயகமற்ற குடும்ப அமைப்பும், ஆண் குழந்தைகளை வரவாகவும், பெண் குழந்தைகளை செலவாகவும் பார்க்கும் குடும்ப அமைப்பில் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் திவ்யாக்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுவது தனித்த நிகழ்வல்ல அது குடும்பம், சமூகம், ஆணாதிக்க சிந்தனை, ஆண் வழி சொத்துரிமை உருவாக்கும் பெண்ணடிமைத்தனம் என பல காரணங்களால் உருவான அழுத்தங்களினாலேதான் திவ்யா தன் குழந்தைகளைக் கொலை செய்திருக்கிறார்.
பெண்ணுரிமை போராட்டத்திற்கு வழி காட்டிய குமரி!
இந்தியாவிலேயே முதல் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்ந்த போது இந்தியாவிலேயே முதன் முதலாக எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விளங்கியது கன்னியாகுமரி மாவட்டம்.
கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறிஸ்தவம், உள்ளூர் திருச்சபைகள் என கிறிஸ்தவர்கள் நிரம்பிய இம்மாவட்டம் கல்வியில் 18-ஆம் நூற்றாண்டிலேயே கல்வி அறிவு பெற்றது. அதற்கு முன்னர் 16-ஆம் நூற்றாண்டிலெயே மீனவர்களிடம் கல்விப் பணியை துவங்கியது கத்தோலிக்க திருச்சபை. நிற்க, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளைத் தவிர்த்து நூற்றுக்கணக்கான சாதிகளுக்கு மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இம்மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களை இடுப்புக்கு மேலே ஆடை அணிய தடை விதித்திருந்த நிலையில் நாடார் சாதி மக்களிடம் பரவிய சீர்திருத்த கிறிஸ்தவர் அதற்கு எதிராக போராடியது.
அதுதான் தமிழகத்தின் முதல் பெண் தலைமை ஏற்ற சமூக போராட்டம். வரிக்கொடுமை, சாதிக்கொடுமைகளுக்கு எதிராக பெண்களை திரட்டி நடத்திய போராட்டமும் அதனால் ஈர்க்கப்பட்ட நடார் இன மக்கள் சீர்திருத்த கிறிஸ்தவத்தை தழுவிய நிலையில் , இந்து சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அய்யா வைகுண்டர் ‘அய்யா வழி” என்ற தனி ஆன்மீக ஸ்தாபனத்தை நிறுவி கிறிஸ்தவம் தழுவாத மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டினார். இவைகள் எல்லாம் சமூக போராட்டமாக இருந்த போதிலும் கல்விதான் விடுதலை கொடுக்கும் எண்ணம் பரவியதால் நாடார் இன மக்கள் அனைவருமே கல்வி கற்க துவங்கினார்கள். ஏற்கனவே இருந்த கத்தோலிக்க நிறுவனங்களும் சேர இம்மாவட்டமே கல்வியில் சிறந்த மாவட்டமாக உருவாகியது வரலாறு.
60 -பதுகளில் பெண் கல்வி பற்றி ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ நாவல் இதை அழகான சித்திரமாக நமக்கு விவரிக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கல்வி வாழ்க்கையை முன்னேற்றியது ஓரளவு வசதியை கொண்டு வந்தது. ஆனால் சாதியை யாரும் மீறவில்லை. சாதி மேலும் மேலும் இம்மாவட்டத்தில் இறுக்கம் பெற்றது. குடும்ப அது குடும்ப ஜனநாயகத்தில் இருந்த நெகிழ்ச்சித்தன்மைகளை உடைத்து பெண்ணை கல்வி கற்ற அடிமையாக மாற்றியது.
பெண்களுக்கு எதிராக வன்முறை குமரியில் 2000 வரை அதிகமாக இருந்தது. ஆசிட் வீச்சுகளும் அதிகம். அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி இதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கை எடுத்த போதிலும், அது பலன் கொடுக்கவில்லை.
இன்றைய குமரி மாவட்டத்தில் சாதாரண ஒரு ஏழை பெண்ணை மணம் முடிக்க வேண்டுமென்றால் 60 பவுன் நகையும் சில, பல லட்சங்களும், வேண்டும் தமிழகத்திலேயே கொடூரமான வரதண்டனை பழக்கம் உள்ளது சந்தேகத்திற்கிடமில்லாமல் குமரி மாவட்டத்தில்தான். ஒரு மேல் மத்திய தரவர்க்க குடும்பத்தில் கோடிகளில் பேசப்படும் திருமணமும் அதன் நடைமுறைகளையும் நீங்கள் அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
ஆக, கல்வியும் வளர்ச்சியும் குடும்பத்தையும் சாதியையும் சடங்குகளையும் இறுக்கமாக்கியிருக்கும் நிலையில் ஏழைகளான திவ்யாக்கள் மூன்று பெண் குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றுக் கொள்ளும் போது குடும்பம் அப்பெண்ணின் மீது செலுத்தும் அழுத்தம் எத்தகையது?
பெண் என்றால் பெருமையாக செலவு செய்யும் அதே சமூகத்தில்தான் பெண் என்றால் செலவு என்கிற எண்ணமும் இயல்பாக வந்து விடுகிறது. தனியொரு பெண்ணாக இரு குழந்தைகளை திவ்யா கொலை செய்திருக்கலாம் ஆனால் அது அவர் மட்டுமே செய்த கொலை செய்தானா?
கொலை எனும் ஒற்றைப் பொருளில் இதை நீதிபதி நோக்கமாமல் சமூக நோக்கில் நோக்கினால் மொத்த கண்ணனின் குடும்பமும் கூட கம்பி எண்ண வேண்டியிருக்கும் அனால் சட்டம் தன் நேர்மையை நிரூபிக்கவும், தன் புனிதத்துவத்தை காக்கவும் இம்மாதிரி திவ்யாக்கள் சிக்கும் போது அவர்களை பலி கொடுத்து தன்னை புனிதப்படுத்திக் கொள்ளும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*