9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் பழனிசாமி சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் இன்று சந்திப்பு நடத்துகிறார்.

பன்னீர் செல்வத்தின் முதல்வர் பதவி வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து சசிகலாவின் சிறை, தினகரனின் சிறை பழனிசாமிக்கு பதவி ஆசையை வளர்த்துவிட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினகரன் ஜாமீனில் வெளிவந்ததும் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிலவி வருகின்றன. தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து தினகரனுக்கு ஏற்கனவே 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்துவந்த நிலையில் தற்போதுவரை அவருக்கு 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தினகரனுக்கு பெருகி வரும் எம்.எல்.ஏக்களின் ஆதரவை கண்டு சிறிது அவசரப்பட்டுவிட்டோமோ என்றே பழனிசாமி கருதக்கூடும். ஏனெனில் இன்று மட்டும் தினகரனை 10 எம்.எல்.ஏக்கள் சந்தித்திருக்கின்றனர். வரும் நாட்களில் இன்னும் அவருக்கு ஆதரவு பெருக வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் தலித் எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் இனியும் பொறுமையாக இருந்தால் தன்னிடம் இருக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் சென்றுவிடுவார்களோ என்று அச்சப்பட்ட பழனிசாமி மதியம் 3 மணிக்கு 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை சந்திக்கவிருக்கிறார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், வேலூர், கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர். தொகுதி சார்ந்த பிரச்னைகளுக்காக இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாக கூறப்பட்டாலும் இது அரசியல் சார்ந்த சந்திப்புதான் என கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு எம்.எல்.ஏக்களை பழனிசாமி சமாதானப்படுத்துவதற்குத்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*