ஆட்சிக்கு ஆபத்தில்லை: தினகரன் சொல்லும் செய்தி என்ன?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தினகரனை 30 எம்.எல்.ஏக்கள் வரை சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். “எங்களால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த விதமான நெருக்கடியும் இல்லை” என்று சொல்வதை ஆச்சரித்தோடுதான் பார்க்கிறார்கள் அத்தனை பேரும். தினகரன் சொல்ல விரும்பும் செய்திதான் என்ன?
மத்தியில் ஆளும் பாஜக அதிமுகவின் பிரதானமான இரு அணிகளையும் இயக்கி வந்ததாக பரவலாக பேசப்பட்டு வந்தது. மத்திய அரசின் அணுகுமுறையும் மத்திய அமைச்சர்கள் தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட்டமையும், ஆளுநர் தமிழக அரசை கட்டுப்படுத்தி வருவதும் அதை உறுதிப்படுத்துகிற நிலையில்,

 
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கும் ம.நடராசனுக்கும் நடந்த மோதலையொட்டி அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை பிரிக்கும் ஆபரேஷனை பாஜக துவங்கியது. பன்னீரை வைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் கூவத்தூரில் நடந்தது அந்த தாக்குதலில் இருந்து வெற்றிகரமாக தப்பிய எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு கட்சிக்கு துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்து விட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. ஆனால் அந்த ஆபரேஷனின் அடுத்த தாக்குதல் தினகரன் மீது தொடரப்பட்டது. ஆனால் இத்தாக்குதலில் இருந்து தற்காலிகமாக வெளியில் வந்துள்ள தினகரன் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டி கட்சி என் பக்கமே உள்ளது என்பதை மறைமுகமாகச் சொல்கிறார்.

 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை செய்து வந்த பின்னர் தினகரனின் முடிவுகள் உறுதியாகியிருக்கிறது. தன் பக்கம் எவளவு எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அவர்களால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் எழாவது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தன்னையோ சசிகலாவையோ கட்சியில் இருந்து நீக்க முடியாது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

 
இப்போதைக்கு அதிமுக மூன்றாக உடைந்திருந்தாலும் எடப்பாடி பழனிசாமியும் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்பதே தினகரனின் எதிர்பார்ப்பு. ஆனால் தினகரன் மீண்டும் வந்து கட்சிக்குள் தலையிடுவார் என்பதை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி ஏகப்பட்ட வாக்குறுதிகளை மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கொடுத்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை மோடியை வைத்து திறப்பது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மோடியை வைத்து கொண்டாடுவது, மத்திய அரசின் சாதனைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடுவது. பாஜகவை குஷிப்படுத்தும் இம்மூன்று வாக்குறுதிகளையும் இனி செயல்படுத்துவதில் பழனிசாமி சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதே நேரம் ஆட்சியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் கட்சியை என்னிடம் விட்டு விடுங்கள் என்று சொல்லும் தினகரனின் அணுகுமுறை இந்த நான்காண்டுகளுக்கு மட்டுமே பலன் கொடுக்குமா நீடித்திருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காரணம் அடுத்தடுத்து காத்திருக்கும் வழக்குகள் ஒரு பக்கம் என்றாலும் தமிழகம் முழுக்க ஆளுக்கொரு திசையில் சிதறிக் கிடக்கும் கட்சியினரை ஒருங்கிணைத்து , இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு 4 ஆண்டுகள் கழித்து சசிகலா சிறையில் இருந்து வரும் போது கட்சியை அவரிடம் ஒப்படைக்கும் திறமை தினகரனுக்கு இருந்தால் அவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு ஆனால், அது அத்தனை எளிதில் சாத்தியமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*