கலைந்தது ஜெயலலிதாவின் 100 வருட கனவு?

அதிமுக கட்சி இரண்டாக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம். சின்னத்தை திரும்ப பெறுவதற்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் வந்தார். அவர் வெளியில் வந்ததிலிருந்து தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை மீண்டும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்ததும் பழனிசாமி அரசுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக தினகரனுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் தலித் எம்.எல்.ஏக்கள், அமைச்சர் பதவி கேட்டும் பழனிசாமி தராததால் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமி தன் சமுதாயத்தினவரின் ஆதிக்கத்தை கட்சிக்குள் வளர்த்துவிட்டதால் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என பலர் தினகரன் பக்கம் சாய ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமாக தினகரன் செய்ய ஆரம்பித்திருக்கும் தைரியமான அரசியலாலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதனை எழுதி கொண்டிருக்கும்போது தினகரனுக்கு ஆதரவாக 29 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் வரும் நாட்களில் செல்வதற்கே வாய்ப்புகள் அதிகமென கருதப்படுகிறது. சசிகலாவும், தினகரனும் சிறை சென்ற பிறகு பழனிசாமிக்கு வந்த பதவி ஆசையின் விளைவே இந்த பிளவுகளுக்கெல்லாம் காரணமென கருதப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் கூறும்போது, தினகரனுடன் ஆலோசனையில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் முதல்வருடனும் ஆலோசனையில் ஈடுபடுவார்கள், எங்களால் பழனிசாமி அரசுக்கு எவ்வித நெருக்கடியும் வராது என்று கூறினார். ஆனால் எம்.எல்.ஏக்களின் மனநிலை எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் பழனிசாமி தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு தினகரன் பக்கம், 29 எம்.எல்.ஏக்கள், பழனிசாமி பக்கம் 93 எம்.எல்.ஏக்கள், பன்னீர் செல்வம் பக்கம் 12 எம்.எல்.ஏக்களும், இருக்கின்றனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்ற நிலையில் பழனிசாமி அரசுக்கு 93 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தருகின்றனர். அதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் வெட்டு தீர்மானம் கொண்டுவந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும். அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். எனவே தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரலாம் எனவும் கருதப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இரு அணிகளையும் ஒட்ட வைத்தாலும் அதிமுக பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தவறும் நிலையே உருவாகும். ஏனெனில் இரு அணிகள் இணைந்தாலும் 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவே கிடைக்கும். தினகரன் பக்கம் ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் மறுபடியும் பாஜகவுக்கு பயந்தவர்களின் கீழ் இருப்பதைவிட பாஜகவை தைரியமாக எதிர்ப்பவரின் கீழ் இயங்கலாம் என்ற மனப்பான்மையில்  இருப்பதால் இரண்டு அணிகள் இணைந்தாலும் அந்த அணிக்கு தங்களது ஆதரவை தருவதில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.  தினகரன் தரப்பிலிருந்து, சசிகலா பொதுச் செயலாளராகவும், தினகரன் துணை பொதுச் செயலாளராகவும் நீடிக்க வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நேற்று மாலை நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சி வழிகாட்டுதல் குழுவின்படி செயல்படும், ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்துவார் என்று கூறினார். ஜெயக்குமாரின் இந்த பேச்சு தினகரன் தரப்புக்கு மேலும் கோபத்தை கிளப்பியிருக்கிறதென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் ஜீன் 14-ல் கூடப்போகும் சட்டசபை கூட்டத்தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை சட்டசபையில், நான் இறந்தாலும் எனக்கு பின் 100 வருடங்கள் இந்த கட்சி நிலைக்குமென்று கூறியிருந்தார். ஆனால் அவர் இறந்த 6 மாதங்களில் கட்சியின் பெயர் போனது, கட்சியின் சின்னம் போனது. தற்போது அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அமைத்த ஆட்சியும் பறிபோகும் நிலைமை உருவாகியிருப்பதை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் மிகுந்த கவலையோடு பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*