தினகரனுக்கு பெருகும் ஆதரவு!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை இன்று மேலும் 3 எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்ததும் அவரை கட்சியிலிருந்து பழனிசாமி அணியினர் நீக்கினர். அதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது அரசு 4 ஆண்டுகள் நீடிக்குமா இல்லை கவிழுமா என்ற கேள்வி எழுந்தாலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பில்லை. தினகரனை பொறுத்தவரை ஆட்சியில் தனது தலையீடு இருக்காது கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள பழனிசாமி தரப்பு தயங்கி கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிமுக கட்சிக்குள் சசிகலாவின் குடும்பம் மீண்டும் தலை தூக்குவதை விரும்பவில்லை. அதனால் பாஜகவுக்கு பயந்துதான் தினகரனிடம் கட்சி சென்றுவிட கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பாஜகவுக்கு பயந்து தினகரனை கட்சியிலிருந்து நீக்கினால் அவர் ஆட்சியை கவிழ்த்து விடுவாரோ என்ற பயமும் பழனிசாமிக்கு இருக்கிறது. இதனால் பழனிசாமி செய்வதறியாது திகைத்து கொண்டிருக்கிறார். மற்ற எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் சென்று விடக்கூடாது என்பதற்காக பழனிசாமியும் எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு நேற்றுவரை 29 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். நேற்று ஒருநாள் மட்டும் அவரை 18 எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து தினகரனுக்கு இன்றும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இன்று அவரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். தினகரனுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவினை கண்டு பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

தினகரனை சந்தித்த பின் எம்.எல்.ஏ போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தட்டும், கட்சியை டிடிவி தினகரன் வழிநடத்தட்டும். இதை யாரும் தடுக்க முடியாது. பன்னீர் செல்வம் அணியிலிருக்கும் எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்.தமிழகத்தில் ஆட்சி கவிழாது. இந்த ஆட்சி நிச்சயம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெறும். என்றார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*