அய்யாக்கண்ணு கொளுத்திய நெருப்பு வடக்கில் எரிகிறது!

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு நடத்திய  போராட்டம்தான் மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டமாக வெடித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை, தமிழகத்தில் நிலவிய வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவிரி டெல்டா வறண்டு போய் விட்டது. கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில்  7-வது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இது டெல்டா மாவட்டங்களில் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் போராட்டம் நடந்தது.

அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலுமே விவசாயிகள் கடன் பிரச்சனையும், வறுமையும் தற்கொலையும் பூதாகரமாக  வெடித்துள்ள நிலையில், இதை வைத்து கேலி கிண்டல் செய்து  வருகிறது பாஜக ஆளும் மாநில அரசுகள். “யோகா செய்யுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக அட்வைஸ்

41 நாட்கள் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த போராட்டங்களை  வட இந்திய ஊடகங்கள் கிண்டலும் கேலியும் செய்ததோடு அகில இந்திய அளவில் அதற்கு முக்கியத்துவம் எழாமல் பார்த்துக் கொண்டன. ஆனால் பஞ்சாப், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாய சங்கத்தினர் அப்போராட்டத்தில் கலந்து கொண்ட அதே வேளையில் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் இந்திய விவசாயிகள் சங்கம் (Bharatiya Kisan Sangh)  பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டதோடு போராடப் போவதாகவும் அறிவித்தது.

இந்த போராட்டத்தில் வெளிமாநில விவசாய சங்கத்தினர் கலந்து  கொள்வதை தடுக்கும் நோக்கில் பாஜக பிரமுகர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். டெல்லியில் நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அய்யாக்கண்ணுவை சந்தித்த தமிழக முதல்வர் போராட்டத்தை முடித்து வைத்தார்.  போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்ட அய்யாக்கண்ணு தமிழகம் திரும்பிய நிலையில் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

ஆனால் அதே நேரம் டெல்லி போராட்டத்திற்கு முறையாக ஆதரவளிக்கவில்லையே என்ற குமுறல் வட இந்திய விவசாய சங்கங்களிடையே இருந்து வந்தது. “டெல்லிக்குச் சென்று தமிழக விவசாயிகளுடன் இணைந்து போராடி இருந்தால் இந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்கும்” என்ற மனக்குமுறல் இருந்த நிலையில்தான் விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட விளை  பொருட்களுக்கு விலை இன்றி போக அதை சாலையில் கொட்டி போராட்டங்களை துவங்கினார்கள்.

தேசியம் பாகிஸ்தான், காஷ்மீர், ராணுவம், யோகா என்று பல வித்தைகளைக் காட்டி இந்துக்களையும், இந்து விவசாயிகளையும் நீண்ட நாள் ஏமாற்றி விட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்கள்.

பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் வெடித்து வருவதை ஒட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்று அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த போராட்டம் வெற்றி பெறா விடாலும் அது இந்திய விவாசாயிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் இன்று வட இந்திய மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*