மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது : தம்பிதுரை

மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது பெரும்பான்மையை பயன்படுத்தி கொண்டு மாநிலங்களின் சுயாட்சி உரிமையில் தலையிட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் பாஜவின் செயல்பாடுகளும் இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவின் தலையீடு அதிகளவில் இருக்கிறதென்ற குற்றச்சாட்டினை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுவரைக்கும் மத்திய அரசு தமிழக அரசுக்கு பதிலேதும் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை தமிழகம் ஏற்காது. மலேசியாவில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.வில் பிளவு என்பதை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தற்காலிகமானதுதான்” என்று தம்பிதுரை கூறினார். அதிமுகவின் இரு அணிகளையும் பாஜக கட்சி இயக்குகிறதென்று அனைவராலும் கூறப்பட்டு வரும் நிலையில் தம்பிதுரை மத்திய அரசுக்கு எதிராக பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*