தினகரனின் சுற்றுப்பயணம்!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனும் சிறை சென்றதை தொடர்ந்து அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்கும் நடவடிக்கை தொடங்கியது. அதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லையென பன்னீர் அணியினர் கூறிவிட்டனர். அதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தனக்கிருக்கும் செல்வாக்கை தெரிந்து கொள்வதற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்தார். அவர் வெளிவந்ததும் கட்சி பணியில் ஈடுபட போவதாக அறிவித்தார். ஆனால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பழனிசாமி தரப்பு கூறியதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை அவருக்கு 33 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பெசன்ட் நகரில் அமைந்துள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னீர் செல்வத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் தினகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் உறுதிபடுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதனை எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார். இந்த சுற்றுப்பயணத்தை அவர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் தனது சுற்றுப் பயணத்தை மதுரையில் இருந்து தொடங்குவார் என்று தெரிகிறது. தொடக்க நாள் அன்று மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசும் தினகரன், மாவட்டம்தோறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*