இணைப்புக் குழு கலைப்பு:பன்னீர் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பன்னீர் செலமும், எடப்பாடி பழனிசாமியும், தினகரனுமாக அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் தினகரன் சிறைக்குச் சென்ற பின்னர் 11 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பன்னீர் அணியினர்  எடப்பாடி பழனிசாமி அணியிடம் பேச குழு ஒன்றை அமைத்திருந்தனர். இக்குழு ஒரு முறை கூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் இரு அணிகளுமே இணைப்பு இணைப்பு என்று சொல்லி பரஸ்பரம் சாக்கடையை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரனுக்கு 33 எம்.எல்.ஏக்கள் இதுவரை ஆதரவளித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியே இனி தினகரனை பகைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது எனும் நிலையில் தினகரனை விமர்சிக்க வேண்டாம் என்று அறிவித்த நிலையில், அதிமுக மேலும் புதிய அணிகளாக உடையுமா என்ற அச்சம்தான் உள்ளதே தவிற, இரு அணிகளும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை.
இந்நிலையில் திருவேற்காடு பகுதியில் பன்னீர் அணியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னீர் பேசும்  போது “ அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர்” என்று பேசினார்.
அடுத்தடுத்து மக்கள் பல்வேறு வாழ்க்கை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும்  நிலையில் அடுத்த பேரிடியாக ஜி.எஸ்.டி வரிச்சுமை மக்கள் மீது இடியாய் இறங்க காத்திருக்கும் நிலையில்  மக்கள் அதிமுக இணைப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று பன்னீர் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*