குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு : எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் குழு!

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக சார்பில் யார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்கட்சி சார்பில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று  அறிவிக்கப்பட்டது. அந்த குழுவில் அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நியமிக்க குலாம்நபி ஆசாத் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியை சேர்ந்த ஆர்எஸ் பாரதியும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளார். மேலும் மல்லிகார்ஜுன கார்கே, டெரிக் ஓ பிரைன், சீதாராயம் யெச்சூரி, சரத் யாதவ் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*