புத்துணர்ச்சியுடன் வைகோ!

தமிழக அரசியல் களத்தை கையாள்வதிலும், அதன் எதிர்பாரா சூழல் அமைவுகளாலும் சோர்வுக்குள்ளாகியிருந்த வைகோ மலேஷியா சென்ற இடத்தில் அவமானப்படுத்தப்பட்டு  தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.  இந்நிகழ்வை அரசியல் முரண்பாடுகளைக் கடந்து  அனைவரும் கண்டித்தனர். மூத்த தலைவரான வைகோவை தனிமைப்படுத்தும் நோக்கில் மலேஷிய அரசு எடுத்த நடவடிக்கையை அனைத்து தலைவர்களுமே கண்டித்தனர். அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் ஸ்டாலினும் வைகோவை திருப்பி அனுப்பியதை கண்டித்தார்.

இந்நிலையில், நெல்லைக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த வைகோவுக்கு மதிமுக பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மின்னல் முகமது அலி உள்ளிட்ட முக்கிய மதிமுக பிரமுகர்கள் வைகோவை வரவேற்று திருமண விழாவுக்கு அழைத்துச் சென்றனர்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியவர் மலேசியாவில் நடந்ததை விவரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “மலேசியாவில் நடந்த சம்பவம் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமாக நான் கருதுகிறேன். 2014-ம் ஆண்டு மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த உலக தமிழர் மாநாட்டில் சிங்கள அரசை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க தீர்மானம் பிரகடனம் செய்தோம். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக நான் கலந்து கொண்டு பேசினேன்.

மலேசிய விமான நிலையத்தில் என்னை மலேசியாவிற்குள் செல்ல அனுமதி மறுத்து என்னிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டனர். அது தொடர்பாக 8 மணி நேரம் விளக்கம் கொடுத்தேன். அப்போது அவர்கள் விடுதலை புலிகள் உடையில் இருந்தீர்களா என்று கேட்டதற்கு இலங்கை ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப் புலிகள் உடையில் இருந்ததாக விளக்கம் கூறினேன்.

ஆனால் என்னுடைய விளக்கத்தை அவர்கள் ஏற்க வில்லை. மலேசியாவில் எனக்கு நேர்ந்தது பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். மலேசியாவில் உள்ள இந்திய தூதர் இதுபற்றி என்னிடம் கவலை தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் அமைக்க வேண்டும் என கூறுவது அவர்களின் உரிமை. இதில் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நெல்லை கலால் அலுவலகத்தை மதுரைக்கு இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சில அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பம் காரணமாக இந்த தவறான முடிவை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கசப்புணர்வுகளை மறந்து ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை வந்தால் நல்லதுதான். கருத்து கணிப்புகள் குறித்து தேர்தல் நேரத்தில் தான் கூற முடியும். திராவிட இயக்கம் தமிழகத்திற்கு மறுமலர்ச்சியையும், சமூக நீதியையும் ஏற்படுத்திய இயக்கம். இதை விமர்சித்தால் அதை தாங்கி கொள்ளும் ஆற்றலும் திராவிட இயக்கத்திற்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*