மராட்டியத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி!

மராட்டியத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பருவ மழை பொய்த்து வருவதால் உருவான வறட்சியால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 42 நாட்களாக போராடினர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு மாட்டினை காக்கிறது ஆனால் மாட்டினை வளர்க்கும் விவசாயிகளை காக்க தவறுகிறதென்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச விவசாயிகள் விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரியும், கடன் தள்ளுபடி செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அம்மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக ஆட்சிக்காலத்தில் சாமானியர்கள் நிம்மதியாக வாழ முடியாதோ என்ற சந்தேகமும் எழுந்தது. இதேபோல் மராட்டியத்திலும் விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் காய்கறிகள், பழங்களை சாலையில் வீசி வாகனங்களை ஏற்றி நசுக்கப்பட்டன. பால் வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு சாலைகளிலும், வீதிகளிலும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்பட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  மராட்டியத்தில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடன் தள்ளுபடிக்கு குழு அமைக்கப்பட்டு வரைமுறைகள் உருவாக்கப்படும்.  என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  அரசின் இந்த அறிவிப்பால் மராட்டிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து மராட்டிய அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*