கூவத்தூர் பணப்பட்டுவாடா : திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பாக திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அதனையடுத்து சசிகலா தரப்பினை சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு  ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறதென்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அதனை எம்.எல்.ஏக்கள் மறுத்து வந்தனர். தற்போது அவர்களது முகத்திரையை கிழிக்கும் விதத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி எம்.எல்.ஏக்கள் பணம் பெற்றதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசுகையில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் 6 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு போன்றவர்களுக்கு பத்து கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் பேசியிருந்தார். இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், கூவத்தூர் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக கட்சியின் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோரின் முன்னிலையில் ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது நீதிபதிகள் இதுதொடர்பாக ஆதாரங்களை திரட்டி தனி மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஆதாரங்களை திரட்டி இன்று தனி மனு தாக்கல் செய்யப்படுமென்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகின்ற 16-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமென்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*