சேகர் ரெட்டியின் 50 கிலோ தங்கம் முடக்கம்!

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 50 கிலோ தங்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 14 கோடி ரூபாய் ஆகும்

அதிமுகவிலிருந்து பிரிந்து தற்போது தனியாக செயல்பட்டு வரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் அவர் கோடி கோடியாக சம்பாதித்தார். கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கறுப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில்,  சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் சிக்கியதையடுத்து தொழிலதிபர் சேகர் ரெட்டி கைதானார். அவரைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது. சமீபத்தில் சேகர் ரெட்டி ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 30 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை முடக்கியது. தற்போது மேலும் 50 கிலோ தங்கம் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும். சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 68 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*