ஜனநாயக நாட்டுக்கு ஊடகம் அவசியம்: துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1938ஆம் ஆண்டு துவங்கி வைத்த ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக, பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் மீது, அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, 2008ல், தன் செயல்பாடுகளை, அந்த பத்திரிகை நிர்வாகம் நிறுத்தியது. இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.

இந்நிலையில், அந்த பத்திரிகையை மீண்டும் வெளியிட, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு, நேற்று மீண்டும் துவங்கியது. இதற்கான விழா, பெங்களூரில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்ட்ஸ் வெளியிட, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முதல் பதிப்பை பெற்று கொண்டார்.

இதில் பேசிய ஹமீது அன்சாரி, “நாட்டின் சுதந்திரத்துக்காக, ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் முக்கிய பங்காற்றியது. ஜனநாயக நாட்டிற்கு, ஊடகம் மிகவும் அவசியம். யாரும் ஊடகத்தை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது. விளம்பர ரீதியான செய்திகள் வருவதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த முறை இன்றைய ஊடகங்களில் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவத்தினர், பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்களை காங்கிரசார், தவறாக பேசக்கூடாது. விவசாயிகள், ஏழைகள், சிறுபான்மையினரை, பா.ஜ.க அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. ஆண்டுதோறும், இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறிய மோடி அரசு, எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தின் பெயர்களை மாற்றி, பா.ஜ.க அரசு செயல்படுகிறது” என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*