பாஜக நடத்தும் ஆக்ரமிப்புப் போரில் ஊடகங்களின் பங்கு!

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக இந்தியாவின் தெற்கு, வடக்கு, மேற்கு,கிழக்கு என சகல திசைகளிலும் ஆட்சி அமைப்பதே நோக்கமாக இருக்கிறது. இப்போது 13 மாநிலங்களை ஆளும் பாஜக நடத்தி வரும் இந்த போரின் முன்னணி படைகளாக அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் மாறியிருக்கின்றன.
தமிழகம்
தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை பெறும் அளவுக்குக் கூட பாஜகவுக்கு செல்வாக்கு கிடையாது. குமரி மாவட்டத்தில் வலுவான கூட்டணி அமையாமல் வாக்குகள் சிதறி சிறுபான்மையோர் வாக்குகள் சிதறுவதால் மட்டுமே பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளிலில் வெல்லும்.
இடதுசாரிகளின் வலுவான தொழிற்சாங்க பின்னலோடு இருந்த கோவையில் நடந்த மதக்கலவரங்களுக்கு பின்னர் கோவையில் பாஜக காலூன்றியது. ஆனால் அங்கும் அதனால் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை. இப்படி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மற்ற அரசியல் கட்சிகளைப் போல போட்டியிட்டு மக்களிடம் வாக்குகளை வாங்கி வெல்லும் நிலையில் பாஜக இல்லை.
ஆனால் அதிமுகவை பலவீனமாக்கி அந்தக் கட்சியையும், ஆட்சியையும் தன்கட்டுக்குள் வைத்திருக்கும் பாஜக அதை வெற்றிடம் என்று சொல்லி தானே அந்த இடத்திற்கு மாற்று என்று கூறி வருகிறது.
மக்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் எனும் நிலையில் மக்கள் போராட்டங்களிலும் மோடிக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படும் நிலையில், பாஜகவினருக்கு வலுவான ஆதரவு தளமாக உருவாகியிருகின்றன அச்சு, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்.
பாஜகவின் இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் நாடு சந்தித்துள்ள வீழ்ச்சி பற்றி பேசாத இந்த ஊடகங்கள் மத்திய அரசு மாநிலங்கள் மீது தொடுக்கும் போரின் ஒரு அங்கமாக நின்று அவர்களுக்காக யுத்தம் செய்கிறார்கள். பாஜக ஆளும் 13 மாநிலங்கள் பற்றிய பெயட் செய்திகளோ, பாஜக பிரமுகர்கள், மோடியின் வீரபிரதாபங்கள் பற்றிய செய்திகளோ இன்றைய அச்சு ஊடகங்களில் இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.  “மாட்டை விற்று டாய்லெட் கட்டிய மூதாட்டி” என்று வரும் செய்தியை ஏதோ ஒரு முதிய பெண்ணின் சுகாதார அக்கறை என நீங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் அச் செய்தியின் பின்னார் ஒரு கட்டணத்தை நிர்ணயணம் செய்கிறார்கள் சிலர்.

மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளின் தலைமைகளை புறக்கணிக்கும் தொலைக்காட்சிகள் பாஜகவினருக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. விவாதங்களின் மையப்பொருளே பாஜக அல்லாத கட்சிகளை குதறி எடுக்கும் படியாக வடிமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான விவாதங்களில் பாஜகவினரின் கருத்துக்களை பொது மக்களிடம் திணிக்கும் விதமாக விவாதங்களை வடிவமைத்துக் கொள்கிறது ஊடகங்கள்.
அச்சு ஊடகங்களிலும் இதுதான் நிலைமை சசிகலா, தினகரன், பன்னீர் அணி தொடர்பான கிசு கிசுக்களை புலனாய்வு என்ற பெயரில் எழுதிக் கொட்டும் இந்த ஊடகங்கள் மூன்றாண்டு கால மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி பேசுவதில்லை.
பணமதிப்பிழப்பு, மாட்டுக்கறி, ஜி.எஸ்.டி என மக்கள் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு நடத்தும் யுத்தத்தின் ஒரு பங்காளிகளாக தமிழக ஊடகங்கள் மாற்றம் பெற்று விட்டது இந்த மூன்று ஆண்டுகளில்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*