ஸ்டாலின் கைது : பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம்!

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது. அப்போது கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து இங்கு பேச அனுமதிக்க முடியாது என்றார் சபாநாயகர் தனபால். அதனால் திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ’MLA for SALE’ என்ற பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  தமிழகம் எங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*