மாட்டிறைச்சித் தடை : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மாட்டிறைச்சிக்குத் தடை விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்று சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தென் இந்தியாவில் எதிர்ப்பு பலமாக வலுத்தது. கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை  தங்கள் மாநிலங்களில் இயற்ற முடியாது என நேரடியாகவே தெரிவித்தன. குறிப்பாக கேரளா மாநிலம்  மாட்டிறைச்சி தடைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு பிடிக்காத எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர்களும் எம்.பிக்களும் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விரைவில் பதிலளிக்கப்படும் என்றே கூறி வருகிறார். இதனால் தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் மாட்டிறைச்சிக்குத் தடை குறித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஹைதராபாத் தனியார் அமைப்பு ஒன்று கடந்த ஜூன் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு இயற்றியிருக்கும் மாட்டிறைச்சிக்குத் தடை சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாட்டிறைச்சித் தடை குறித்து மத்திய அரசு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*