அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் பழனிசாமி ஆலோசனை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தினகரன் ஜாமீனில் வெளிவந்ததும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பழனிசாமி அணியினர் அறிவித்தனர். கட்சியிலிருந்து நீக்கினால் தினகரனின் அரசியல் வாழ்வு முடிந்துவிடுமென்று நினைத்த பழனிசாமி அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த பிறகுதான் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தினகரனுக்கு இதுவரை 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பழனிசாமி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது கூடியிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பதற்றத்திலேயே பழனிசாமி சட்டசபையில் அமர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்றைய சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தொடருவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றால் வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்றும் நிபந்தனையை வைத்தார்கள். பாஜக பழனிசாமியிடம் ஜனாதிபதி தேர்தலுக்கு அதிமுகவின் முழுமையான ஆதரவு வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் இந்த நிபந்தனை பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியளித்திருக்கிறது. என்றும் பழனிசாமி இதனால் மிகவும் குழம்பி போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு நடந்த பணப்பட்டுவாடா வீடியோ வேறு பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை சட்டசபையில் கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நெருக்கடி, மற்றொரு பக்கம் வீடியோ நெருக்கடி என பழனிசாமி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறார். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை முடித்தவுடனே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டினார். இக்கூட்டத்தில் கூவத்தூர் வீடியோ குறித்து திமுகவினர் சட்டசபையில் எழுப்பும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிப்பது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் நிபந்தனை, தினகரனை கட்சியில் இணைப்பதா வேண்டாமா போன்ற பல முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*