யாருக்கு ஆதரவு? முதல்வர் முடிவெடுப்பார் : தம்பிதுரை

முதலமைச்சர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பதென முடிவெடுப்பார்களென மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடந்து வாக்கு எண்ணிக்கை 20-ஆம் தேதி நடைபெறுமென்று கூறப்பட்டுள்ளது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பிலும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு தர பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அதிமுக எம்பியான தம்பிதுரையை வரவழைத்து குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தருமாறு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்தார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, வெங்கய்யா நாயுடுவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்களென்று கூறினார்.  அதிமுக கட்சி வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில்  தனது முழு ஆதரவை நிச்சயம் பாஜகவுக்குத்தான் வழங்குமென்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியபோது டிடிவி தினகரன் கட்சி பணியில் ஈடுபட ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் யாரும் வாக்களிக்கமாட்டோம் என்ற எச்சரிக்கையை வைத்திருக்கின்றனர். தினகரனை கட்சிக்குள் விட்டால் பாஜகவின் நெருக்கடி அதிகரிக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லையென்றால் பாஜகவுக்கு என்ன பதில் சொல்வது போன்ற பல்வேறு குழப்பங்கள் எடப்பாடி பழனிசாமியை நெருக்கி கொண்டிருக்கிறது. தற்போதைக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தினகரனை கட்சிக்குள் அனுமதிக்க பாஜக பச்சை கொடி காண்பித்து குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் தினகரனை கட்சியிலிருந்து கழட்டிவிட சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி தினகரனை கட்சியில் இணைத்து மீண்டும் கழட்டிவிட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆட்சி கலைப்பு அஸ்திரத்தை கையிலெடுப்பார்களோ என்ற அச்சமும் பழனிசாமியை சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலை வைத்து டிடிவி தினகரன் தனது அரசியல் அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டிருக்கிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*