முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி : 2000 பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கடந்த மே 21 ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் அவர்களை கைது செய்தது. மேலும் அவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தையும் செலுத்தியது. அதனையடுத்து அவர்களை புழல் சிறையில் அடைத்தது. திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனையடுத்து அவர்கள் மீது இந்திய எண்ணெய் கழகத்தின் மீது கல் வீசியது, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அனுமதியின்றி வள்ளுவர் கோட்டத்தில் போராடியது போன்று பல வழக்குகளை போட்டு மத்திய அரசின் கைப்பாவை என தமிழக அரசு நிரூபித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பிலும், பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று சென்னையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரின் கைதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் தமிழர் வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ  உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். அதனையடுத்து இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். வேல்முருகன் உட்பட 2000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*