சிவசேனா தலைவரை சந்தித்தார் அமித்ஷா

பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சி ஒரு இந்துத்துவா சிந்தனையுடையவரையே குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கும். ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியா முழுவதும் ஒற்றை கலாச்சாரத்தை திணிப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறது அதனால் குடியரசுத் தலைவரும் இந்துத்துவா மனப்பான்மை உள்ளவராக வந்துவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் கவனமாக இருந்து வருகின்றன. அதனால் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மதசார்பற்ற ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாஜகவின் குடியரசுத் தலைவர் தேர்தல் பணிக்குழு சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். இந்த சந்திப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிவசேனா கட்சியின் நிலைப்பாடு குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிறுத்திய பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிவசேனா கட்சி ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது முடிவு தனிபாணியாக இருக்கும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில முக்கிய கட்சிகளின் தலைவர்களும் உடனிருந்தனர். சமீபகாலமாக பாஜக மற்றும் சிவசேனாவுக்குமிடையே சில கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் சிவசேனாவுடன் மீண்டும் தோழமையை ஏற்படுத்திக் கொள்ளவே அமித்ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே பாஜக கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் 23-ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*