திருநாவுக்கரசர் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம்!

காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளை திருநாவுக்கரசர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாற்றப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. திருநாவுக்கரசர் தெரிவிக்கும் கருத்துக்கு எதிராக ஈவிகேஸ் இளங்கோவனும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிக்கும் கருத்துக்கு எதிராக திருநாவுக்கரசரும் கருத்து கூறிவருகின்றனர். மேலும் கருணாநிதி வைரவிழாவுக்கு வந்த ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை செய்துவிட்டு சென்ற சிறிது நாட்களில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மகளிர் அணி கூட்டத்திலும் உட்கட்சி மோதல் வெடித்தது. இந்நிலையில் தமிழக காங்கிரசில் 72 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாற்றப்பட்டனர். ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இந்த காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ராஜீவ் ஆன்மாவே காங்கிரசை காப்பாற்று என்ற முழக்கத்துடன் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி.ஆர் சிவராமன் தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கூடாது என்று நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டனர். அதையும் மீறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பதவி நீக்கப்பட்ட வெளி மாவட்ட தலைவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவியும் பங்கேற்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்துவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*