சட்டசபையில் இன்று கூவத்தூரா? இல்லை ஆர்.கே.நகரா?

சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மார்ச் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவதாம் நடத்தப்படாமல் கூட்டத் தொடர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு மாத காலத்துக்கு பின்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 14 ஆம் தொடங்கியது. முதல் நாளிலேயே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பணப்பட்டுவாடா விவகாரத்தை முன்வைத்த திமுக இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். இரண்டாவது நாளிலும் பணப்பட்டுவாடா விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கூவத்தூர் பணப்பட்டுவாடா தொடர்பாக விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் தெரிவித்ததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மூன்றாவது நாளும் திமுகவின் வெளிநடப்பு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பழனிசாமி தலைமையிலான அரசை கலைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து நான்காவது நாள் சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக இன்றும் கூவத்தூர் விவகாரத்தை கையிலெடுக்குமா இல்லை மக்கள் பிரச்னைகளுக்கு சட்டசபையில் குரல் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருக்கும் விவகாரமும் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பெரும் விவாத பொருளாக மாறுமென்று கருதப்படுகிறது. இதனால் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் திமுக கையிலெடுக்கவிருப்பது மக்கள் பிரச்னையா? கூவத்தூரா? இல்லை ஆர்.கே.நகரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இன்றைய கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா மீது விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதத்தின் போது திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசவுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*