தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் : நெடுவாசல் மக்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இத்திட்டத்தை, ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பகுதி மக்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தினர். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று  மத்திய, மாநில அமைச்சர்கள் உறுதியளித்தனர். இதனை நம்பி மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கடந்த மார்ச் 27-ஆம் தேதி நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் தங்களது 2-ஆம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதியிலிருந்து மீண்டும் துவங்கினர். இந்த போராட்டம் 68-வது நாளை கடந்துள்ளது.

இந்நிலையில் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகள் பெருகி வருகின்றன. நேற்றய போராட்டத்தில் மணிப்பூர், நாகாலாந்து, அஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், நெடுவாசல் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நெடுவாசல் மக்கள் கூறியுள்ளனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராடவும் திட்டமிட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து தமிழக நலனுக்கு அழிவு கொடுக்கக்கூடிய திட்டங்களை ஒதுக்கி வருகிறது மத்திய அரசு. அதனால் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக என்ன சொன்னாலும் கேட்காமல் தனது மௌனத்தை கலைத்து மாநில நலனுக்காக தமிழக அரசு செயல்பட வேண்டும். இனி வரவிருக்கும் நாட்களில் கூடப்போகும் சட்டசபை கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுக கூவத்தூர் பிரச்னையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்யாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும். மேலும் கொட்டி கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளையும் கையிலெடுத்து மக்களுக்கான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட வேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*