பணப்பட்டுவாடா புகார் வருமான வரித்துறை அறிக்கை வேண்டும் : ஐகோர்ட்

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில் வருமானவரித்துறையின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர் புகார் வந்ததையடுத்து வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. மேலும் அந்த ஆவணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் மற்றும் சில அமைச்சர்களின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது, ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் இந்த விவகாரத்தால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கோரி, சென்னையைச் சேர்ந்த வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தவுடன் வருமான வரித்துறை அதிரடியாக பல இடங்களில் சோதனை செய்தது. அப்பொழுது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர, மாநில தேர்தல் ஆணையத்துக்கு  தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரக்கண்ணன் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையின்போது கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கு நீதின்றம் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு தொடர பரிந்துரை செய்திருந்த பொழுதும், ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியது. இதற்கு இரு தரப்பிலிருந்தும் சரியான விளக்கங்கள் தரப்படவில்லை. இதனால் வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையின் மூலமாகத்தான் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர பரிந்துரை செய்துள்ளது. எனவே வருமான வரித்துறையின் விசாரணை அறிக்கையை வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றே வழக்கையும் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*