தமிழக சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து  ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. பின்னர், ஜி.எஸ்.டி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஜி.எஸ்.டி நாடு முழுவதும் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஜி.எஸ்.டி. மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், ஜிஎஸ்டி தொடர்பான திமுகவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், ஜி.எஸ்.டி தொடர்பாக மத்திய அரசு, வணிகர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை. ஜிஎஸ்டி வரியை அனைவரும் புரிந்துகொள்ள இந்த ஆண்டை பயிற்சி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல், ஜிஎஸ்டி வரியால் தமிழக அரசுக்கு 4400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்  என்று முன்னாள் அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*