”முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் ஏலியன்கள்” – ராம்நாத் கோவிந்த்#video

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீஹார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 20-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கியது.

இதில் பாஜக கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீஹார் மாநில ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநில கான்பூர் மாவட்டத்தில் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி பிறந்தார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். தனது அரசியல் வாழ்க்கையை பாஜக கட்சியிலிருந்து தொடங்கினார். இவர் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜக கட்சியின் தலித் மோர்ச்சா பிரிவின் தலைவராக கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஆவார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பீஹார் மாநில ஆளுநராக பதவியேற்றார். மேலும் இவர் எந்த சர்ச்சை பின்புலமுமற்றவர் என்று பாஜக கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் ராம்நாத் கோவிந்த் 2010ல் ஒரு பத்திரிகை சந்திப்பில் “முஸ்லீம் மற்றும் கிறித்துவ மதத்தினைச் சேர்ந்தவர்கள் ஏலியன்கள்” என்று பேசியுள்ளது பெரிய சர்ச்சைக்குள்ளாகி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு ரங்காநாத் மிஸ்ரா குழு அரசாங்க வேலைகளில் முஸ்லிம்களுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீடும் மற்ற சிறுபான்மையினர் சமூகத்துக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் அளித்தது. இது குறித்து 2010ல் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்… மேலும் முஸ்லீம் மற்றும் கிறித்துவ சமுதாயத்திலும் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமான செயல். முஸ்லிம் மற்றும் கிறித்துவர்கள் அந்நியர்கள். எனவே அவர்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

ஒரு தலித் சமூகத்தவரை வேட்பாளராக களரமிக்கியிருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை முட்டுச்சந்திற்குள் நிறுத்தலாம் என்பது பாஜகவின் திட்டம்.  தலித்தாக இருப்பதாலேயே ஒருவர் புனிதமானவராகி விட முடியாது. ஆர்.எஸ். எஸ் முகாமில் இருந்து உற்பத்தியாகி வரும் எவரும்  சமூகங்களுக்கு எதிரான எண்ண ஒட்டங்களுடனே இருப்பார்கள் என்பதற்கு ராம்நாத் கோவிந்த் ஒரு எடுத்துக்காட்டு.

பலவிதமான சமூகங்களும் வாழும் இந்தியாவிற்கு பன்மைத்துவத்திற்கு எதிரான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆனால் அது  எதை நோக்கிய பயணமாக இருக்கும்? எந்தக் கருத்தை வலுப்படுத்துவார் இந்த ஜனாதிபதி.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*