பேரறிவாளனுக்கு பரோல் மறுத்த தமிழக அரசு!

ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தனது பெற்றோருடன் தங்கியிருக்க சில நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தார். அவரது இந்த மனுவை தமிழக அரசும், வேலூர் சிறைத்துறையும் நிராகரித்து விட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதில் பேரறிவாளனுக்கும் சில உடல் நலக்குறைபாடுகள் உள்ளன. அதற்கான சிகிச்சையையும் அவர் பெற்று வருகிறார். இந்நிலையில் கடுமையான ரத்த அழுத்தம், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு  கடந்த ஓராண்டாக பேரறிவாளனின் தந்தை படுக்கையில் உள்ளார். அவரைப் பார்க்க தன்னை 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பத்திருந்தார். அந்த மனுவில் வயதான தன் பெற்றோரை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தால் சில நாட்களேனும் தான் அவர்களை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் கோரிய பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. தமிழக அரசு நிராகரித்து விட்ட காரணத்தால் சிறைத்துறையும் நிராகரித்து விட்டது.சிறை விடுப்புக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது என்று சிறைத்துறை, தமிழக அரசு சார்பில் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*