‘யுவ புரஸ்கார்’ மற்றும் ‘பால சாகித்ய விருது’ அறிவிப்பு

ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளர்களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய’ விருதையும் 21 இந்திய பிராந்திய மொழிகளின் படைப்புகளுக்கு வழங்கிவருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது தமிழில் கவிஞர் மனுஷி பாரதிக்கும் (ஜெய பாரதி), பால சாகித்ய அகாடமி விருது வேலு சரவணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் மனுஷி பாரதி பெண்களின் வாழ்வு, பெண்களின் உணர்வுகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை கவிதைகள் மூலமாகவும் சிறுகதைகளின் மூலமாகவும் பதிவு செய்து வருகிறார். குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் ஆகியவை இவர் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளாகும். அதில், இவரது ‘ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்புக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலு சரவணன் குழந்தைகளுடைய உலகில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் கலைஞர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். குழந்தைகளுக்கான பாடங்களை நாடகங்கள் வடிவிலும் கதைகள் வடிவிலும் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறார். குழந்தைகளுக்கான சிறந்த நாடக கலைஞராக இவரை சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன. குழந்தைகள் இலக்கியத்துக்காக வேலு சரவணன் அளித்திருக்கும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக பால சாகித்ய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*