உனா முதல் பழனி வரை : மோடி அரசின் தோல்வி!

2014-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த மோடி நிச்சயம் நல்லது செய்வார். மோடி வந்தால் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பெரும்பலான இந்துக்கள் மட்டுமல்லாது சிறுபான்மை சமூகத்தவர்களிடம் கூட இருந்தது. காரணம் அதற்கு முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அத்தனை துன்பங்களை மக்கள் பொருளாதார ரீதியாக அனுபவித்திருந்தார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் பொருளாதார ரீதியாக ஒட்டச் சுரண்டப்பட்டதோடு சமூக பதட்டத்துடனும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்திய சமூகங்கள்.
தொழிலாளர் வைப்பு நிதியத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்க நினைத்தார். ஆனால் வெகுண்டு எழுந்த் தொழிலாளார் எதிர்ப்பால் அந்த முயற்சி தள்ளிப் போடப்பட்டுள்ளது.
“நாங்கள் ஆட்சிக்கு வந்து கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாயை உங்கள் பாக்கெட்டில் போடுவேன்” என்ற மோடியின் கோஷம்தான் மக்களைக் கவர்ந்தது. ஆனால் மூன்றாண்டுகளாகியும் அது பற்றி பேச்சில்லை. ஆனால் அதே கருப்புப் பணத்தை ஒழிக்க என்று சொல்லித்தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் மோடி. மிகப்பெரும் கோடீஸ்வரர்களை குறிவைத்த நடவடிக்கை என்று சொன்ன அந்த நடவடிக்கையால் பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.ஆனால் வீட்டில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கிகளில் கொண்டு டெப்பாசிட் செய்ய போட்ட கெடுபிடிகள் மக்களை அல்லாட வைத்து விட்டது.
அன்று விழுந்த சிறு தொழில்கள் இன்னும் மீளவே இல்லை. அன்றாடச் செலவுகளுக்கு இன்னும் பண நீக்க நடவடிக்கையால் மக்கள் திண்ணாடி வருகிறார்கள். ஒரு சொந்த நாடு அச்சடிக்கும் ரூபாய் நோட்டின் மீதிருந்த நம்பிக்கையை மோடி இழக்கச் செய்தது ஒன்றுதான் அவரது சாதனை. பொருளாதாரம் நசிந்து நைந்து வீழ்ச்சியடைந்ததைத் தவிற வேறொன்றையும் காண வில்லை.
தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராடினார்கள் “விவசாயக் கடன்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்று திமிராகவும் தெனாவெட்டாகவும் இன்று வரை பேசி வருகிறது.மாநில அரசுகளின் வருவாயை பிடிங்கிக் கொள்ளும் மத்திய அரசு மாநில அரசுகள் கேட்கும் எந்த நிதியையும் முழுமையாக வழங்குவதில்லை. தமிழகம் கேட்ட வர்தா நிவாரணம், வறட்சி நிவாரணம் என எதுவும் முழுமையாக வரவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து தமிழகத்தின் தண்ணீர் உரிமையை தடுத்தது. இன்று காவிரி டெல்டா சந்திக்கும் வறட்சியும் தற்கொலையும் மோடியிம் மோசமான நடவடிக்கைகளால் விளைந்தது.
நீட் தேர்வு என்னும் பெயரில் தமிழக மாணவர்களின் கல்வி உரிமை மறுப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வட இந்திய உயர்சாதியினருக்கு அதிக இடம் என எந்த துறையை எடுத்தாலும் மத்திய அரசு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. மோடியின் நடவடிக்கைகளை அவரை ஆதரித்தவர்களே பாராட்டவில்லை. அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி , போன்றவர்களே எதிர்க்கிறார்கள். ஆனால் மோடியை சிறந்த நண்பன் என்கிறார் டிரம்ப். மோடியை சிறந்த நிர்வாகி, சிறந்த பிரதமர் என்கிறது இஸ்ரேல். இந்தியாவுக்கு பிரதமராக இருக்கும் ஒருவரை இந்தியர்களே பாராட்டாமல் வெளிநாடுகள் அதுவும் ஆதிக்க நாடுகள் பாராட்டுகிறதென்றால் மோடி யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறார்.
இப்போது மக்களை பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவும். அதிருப்தி அடைந்து வட இந்தியா முழுக்க மோடி அரசுக்கு எதிராகவும் திரண்டு வரும் விவசாயிகளை திசை திருப்பவும் இப்போது மாட்டரசியலை மக்கள் தலையில் ஏற்றியிருக்கிறார் மோடி.
இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு பகுதி இந்து அமைப்பினரை குஷியாக்கியிருக்கலாம். ஆனால் விவசாயத்தை நம்பி வாழும் இந்துக்களே மாடுகளுக்கு கொண்டு வந்துள்ள தடையை எதிர்க்கிறார்கள்.
அதனால்தான் இந்துக்களின் புனித பசுவை முஸ்லீம்கள் கொல்கிறார்கள் என்ற வதந்தியை பொதுப் புத்தியில் நம்ப வைப்பதில் அவர்கள் வென்றிருக்கிறார்கள். ரம்ஜானுக்கு புது துணி எடுக்கச் சென்ற ஜூனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கொல்லப்பட்ட நிகழ்வு அந்த பொதுப்புத்தியை எடுத்துக்காட்டுகிறது.
எந்த அளவுக்கு அச்சப்படும் அளவுக்கு சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாகனம் ஒட்டிச் செல்லும் ஒருவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் போது அவர் மாடு மீது மோதாமல் இருக்க பெண் மீது மோதி அந்த பெண்ணை கொன்று மாட்டை காப்பாற்றுகிறார். ரயில் பெட்டியின் உள்ளே தவறுதலாக ஏறிய மாட்டை இறக்கி விட்டால் பசு காவலர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என அஞ்சும் டி.டி.ஆர் ஏ.சி கோச்சியில் பசுவை பயணம் செய்ய அனுமதிக்கிறார்.
சந்தையில் பேரக்குழந்தைகளோடு போகும் முதிய பெண்ணை மாடு துரத்துகிறது அந்த மாட்டின் மீது சின்னஞ் சிறிய கற்களை எடுத்து வீசி மாட்டை துரத்துகிறார். ஆனால் பசு காவலர்கள் மாட்டை துன்புறுத்தியதாக அந்த பெண்ணை தாக்குகிறார்கள்.
ஜூனைத்திற்குப் பிறகு அன்சாரி ஜார்கண்டில் கொல்லப்பட்டிருக்கிறார். இயற்கையாக இறந்து கிடந்த மாட்டை அன்சாரிதான் கொன்று விட்டதாக கும்பல் வதந்தி பரப்ப அன்சாரியைக் கொன்று அவருடைய வீட்டிற்கு தீ வைக்கிறார்கள்.
இதோ டிஜிட்டல் இந்தியா சிறப்பாக இருக்கிறது. உனாவில், ராஜஸ்தானில், சட்டீஸ்கரில், டெல்லியில் நடந்ததை பழனி வரை கொண்டு வந்து விட்டார்கள். பிரச்சனையை தூண்டி விட்ட ஜீயர் சுவாமிகள் சூத்திரர்களை போலீசிடம் அடி வாங்க வைத்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
மோடியின் இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் மக்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை. நல்லது என்று ஏதாவது ஒன்றையாவது சொல்ல முடிகிறதா. ஆதாரில் துவங்கி ஜூலை 1- அறிமுகமாகும் ஜி.எஸ்.டி வரை தண்டனை மேல் தண்டனையை மக்களுக்கு வளர்ச்சியின் பெயரல் வழங்க அவர்கள் கண்டெடுத்த ஒரு வார்த்தைதான் ’பசு புனிதம்’
– ஜீவன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*